பிரதமரின் சுதந்திர தின உரையின் சில முக்கிய தொகுப்பு

 

75வது சுதந்திர தினத்தையொட்டி, புது டெல்லியில் செங்கோகோட்டை கொத்தளத்தில் பிரதமர் நரேந்திர மோடி தேசிய கோடி ஏற்றி வைத்த பின்னர், மூவண்ண பலூன்கள் பறக்கவிடப்பட்டன.

அதன்பின் சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி கூறியதாவது.

  • பொருளாதார மேம்பாட்டுக்கென 100 லட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டிலான, தேசிய கட்டமைப்பு பெருந்திட்டம் செயல்படுத்தப்படும்.
  • இந்தியாவை உலகின் பச்சை ஹைட்ரஜன் மையமாக உருவாக்க தேசிய ஹைட்ரஜன் திட்டம் உருவாக்கப்படும். இதன் மூலம், மிகப் பெரிய ஹைட்ரஜன் ஏற்றுமதியாளராக இந்தியா உருவெடுக்கும்.
  • அடுத்த தலைமுறைக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகள், உலகத்தரம் வாய்ந்த உற்பத்தி, அதிநவீன கண்டுபிடிப்புகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்க அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டியது அவசியம்.
  • கொரோனா பெருந்தொற்றை எதிர்கொள்வதில் அயராது பாடுபட்டு வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், துணை மருத்துவ பணியாளர்கள், துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் தடுப்பூசி தயாரித்த விஞ்ஞானிகளுக்கும் பாராட்டு தெரிவித்தார்.
  • நமது விஞ்ஞானிகள் மற்றும் தொழில் துறையினரின் வலிமை காரணமாக தடுப்பூசிக்காக பிறரை சார்ந்திருக்க தேவையில்லாத நிலை உருவாக்கப்பட்டுள்ளது
  • உலகின் மிகப் பெரிய தடுப்பூசி இயக்கம் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வருவதை சுட்டிக் காட்டிய பிரதமர், இதுவரை 54 கோடிக்கு மேற்பட்ட மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
  • டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றதன் மூலம், நமது வீரர், வீராங்கனைகள் நாட்டிற்கு பெருமை தேடி தந்திருப்பதாக குறிப்பிட்டார்.
  • விளையாட்டு வீரர்கள் நமது இதயங்களை வென்றதோடு மட்டுமின்றி, வருங்கால தலைமுறையினருக்கு ஊக்கமளிப்பவர்களாக திகழ்கின்றனர் என்றும் இந்தியாவில் வளர்ச்சிக்கான தருணம் தற்போது வந்துள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
  • கடந்த 7 ஆண்டுகளில், உஜ்வாலா முதல் ஆயுஷ்மான் பாரத் வரையிலான அரசின் பல்வேறு திட்டங்களின் பலன் கோடிக் கணக்கான ஏழை மக்களை சென்றடைந்துள்ளது
  • 21-ஆம் நூற்றாண்டில் நாட்டை புதிய உச்சத்திற்கு அழைத்துச் செல்ல திறமைகளை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம் என்றும் இதற்காக அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
  • ஷெட்யூல்டு வகுப்பினர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பொதுப் பிரிவினரில் பொருளாதார ரீதியாக நலிவடைந்தவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டு, மருத்துவப்படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அண்மையில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டிருப்பதையும் சுட்டிக் காட்டினார்.
  • தற்போது கிராமங்கள் வேகமாக முன்னேற்றம் அடைந்து வருவதாகவும், சாலை மற்றும் மின் இணைப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கடந்த சில ஆண்டுகளில் அதிக அளவில் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
  • கிராமங்களுக்கு இணையதள வசதியை வழங்குவதற்காக கண்ணாடி இழை இணையதள கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டிருப்பதன் காரணமாக, டிஜிட்டல் தொழில் முனைவோர் கிராமங்களிலும் தங்களது நிறுவனங்களை தொடங்க ஆயத்தமாகி வருகின்றனர்.
  • வரும் ஆண்டுகளில் சிறு விவசாயிகளுக்கு புதிய வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும் என்றும் நாட்டில் மிகப் பெரிய சீர்திருத்தங்களை மேற்கொள்ளவும் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தவும், அரசியல் துணிவு தேவை என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.