லோக் ஜனசக்தி கட்சியில் அடுத்தடுத்த பரபரப்பு சம்பவங்கள்!

 

இந்தியாவின் பீகார் மாநிலத்தில் உள்ள முக்கிய கட்சிகளில் ஒன்று லோக் ஜனசக்தி. இந்த கட்சியின் தலைவராக ராம் விலாஸ் பஸ்வான் செயல்பட்டு வந்தார். அவர் காலமானதைத் தொடர்ந்து அவரது மகன் சிராஜ் பஸ்வான் அந்த கட்சியின் தேசிய தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். தற்போது இந்த கட்சியில் சிராக் பஸ்வானுடன் 6 எம்.பி.க்கள் உள்ளனர்.

இதில் ஐந்து எம்.பி.க்கள் சிராக் பஸ்வானுக்கு எதிராக திரும்பியிருப்பது அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த எம்பிக்கள் பாராளுமன்றத்திற்கான லோக் ஜனசக்தி கட்சியின் தலைவராக பஸ்வானின் இளைய சகோதரரான பசுபதிகுமார் பஸ்வானை தேர்ந்தெடுத்துள்ளனர். மக்களவை சபாநாயகர் அதை ஏற்றுக்கொண்டார். இதனால் சிராக் பஸ்வானுக்கு புதிய சிக்கல் உருவாகியுள்ளது. உடனடியாக சிராக் சித்தப்பாவை வீட்டில் சென்று சந்தித்த முயற்சி செய்தும் அவர் சந்திப்பதை தவிர்த்து விட்டார்.

இந்நிலையில் திடீரென சிராக் பஸ்வான் தேசிய தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டதுடன் தேசிய செயற்குழு தலைவராக சுராஜ்பன் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் கட்சியின் தேசிய தலைவரை நியமிக்க தேர்தல் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

அதே நேரத்தில் சிராஜ் பஸ்வான் ஆதரவாளர்கள், தேசிய நிர்வாகக்குழுவை கூட்டி அந்த 5 எம்.பி.க்களையும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சியில் துரோகம் நடைபெற்று வருகிறது என இச்சம்பவம் குறித்து அக்கட்சியின் தலைவர்களில் ஒருவரான ராஜு திவாரி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.