ஐ.நா. வின் பொது செயலாளராக இந்திய வம்சாவளி பெண்! 75 ஆண்டு வரலாறு மாறுகிறதா?

 

ஐ.நா. சபையின் 9வது பொதுச் செயலாளராக அந்தோனியோ குத்தேரஸ் உள்ளார். இவரது பதவிக் காலம் 2021 டிசம்பர் மாத இறுதியில் முடிவடைகிறது. எனினும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு அவரே நீடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். 

Antonio Guterres

இதனிடையே, ஐ.நா.வின் 10வது பொதுச் செயலாளர் பதவிக் காலம் ஜனவரி 2022ம் ஆண்டு தொடங்க உள்ள நிலையில் ஐ.நா. பொதுச் செயலாளர் பதவிக்கு 34 வயதான இந்திய வம்சாவளிப் பெண் அரோரா அகாங்க்‌ஷா போட்டியிட உள்ளதாக ஏற்கனவே அறிவித்துள்ளார். 

Arora Akanksha

இவர், தற்போது ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டத்தின் தணிக்கை ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றி வருகிறார். ஐ.நா.வின் பொதுச் செயலாளர் பதவிக்கு தான் போட்டியிடப் போவதாக ஏற்கனவே அறிவித்த அவர் அப்போது கடந்த 75 ஆண்டுகளாக உலகத்துக்கு அளித்த அகதிகள் பாதுகாப்பு உள்ளிட்ட வாக்குறுதியை ஐ.நா. நிறைவேற்றவில்லை என்று விமர்சித்துள்ளார்.

கடந்த 75 ஆண்டுகளில் ஐ.நா. தனது வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை; அகதிகளைப் பாதுகாக்கவில்லை மிகக் குறைந்த அளவே மனிதாபிமான உதவிகள் செய்யப்பட்டன. தொழில்நுட்பமும் புதிய கண்டுபிடிப்புகளும் மேல்தட்டு மக்களுக்கு மட்டுமே சொந்தமாக உள்ளது. இந்த நிலையை மாற்ற வேண்டுமானால், ஐ.நா. தலைமைப் பொறுப்புக்கு என் போன்ற பணி நிலையில் உள்ளவா்கள் வர வேண்டும் என அவர் அதிரடியாக கூறியிருந்தார். ஐ.நா-வில் ஆடிட்டராக வேலை பார்க்கும் அரோராவுக்கு உடன் வேலை செய்பவர்கள் அனைவரும் ஆதரவு அளிப்பதாக தெரிவித்திருக்கிறார்கள்.

Arora Akanksha

கடந்த ஓர் ஆண்டாக அரோரா தேர்தலுக்காக 30,000 டாலர்கள் வரை செலவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. சமூக வலைதளத்திலும் இணையத்திலும் தன்னம்பிக்கையுடன் அவர் பிரசாரம் செய்து வருகிறார். 75 ஆண்டு கால வரலாற்றில் இதுவரை ஐக்கிய நாடுகள் சபையின் தலைவராக ஒரு பெண் பொறுப்பேற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.