அடேங்கப்பா! வடபழனி கோவிலுக்கு சொந்தமான ரூ.250 கோடி சொத்துக்கள் மீட்பு! அமைச்சர் சேகர்பாபு அதிரடி!

 


சென்னையில் மிகவும் புகழ்பெற்ற ஆலயங்களில் ஒன்று வடபழனி முருகன் கோவில் . இந்த கோவிலுக்கு சொந்தமான இடங்கள் நகரம் முழுவதும் பல இடங்களில் உள்ளன. அந்த வகையில் சாலிகிராமம், காந்தி நகர் பகுதியில் வடபழனி முருகன் கோவிலுக்கு சொந்தமான 5.5 ஏக்கர் நிலம் உள்ளது. இதன் மதிப்பு சுமார் ரூ.250 கோடி .இந்த இடத்தில் ஒரு ஓரத்தில் பெண்கள் விடுதி கட்டப்பட்டு உள்ளது. மீதம் உள்ள இடம் கழிவுகள் கொட்டப்பட்டும் பராமரிப்பு இல்லாமல் இருந்து வருகிறது.

இதனால் இதை பயன்படுத்தி இந்த இடத்தை அறநிலையத்துறையிடம் இருந்து எந்தவித அனுமதியும் பெறாமல் சினிமா துறையினர் தனி நபர்கள் வாகனங்களை நிறுத்தும் இடமாகவும், இரவு நேரங்களில் சமூக விரோத செயல்களும் நடைபெற்று வந்தது. வடபழனி கோவிலுக்கு சொந்தமான இடத்தை மீட்டு சுத்தம் செய்து பராமரிக்க அப்பகுதி மக்கள் அறநிலையத்துறைக்கு கோரிக்கை விடுத்தனர். அதன் அடிப்படையில் கோவிலுக்கு சொந்தமான இடத்தை மீட்கும் பணி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மாநகராட்சி கமி‌ஷனர் ககன்திப்சிங் பேடி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

இதுகுறித்து அமைச்சர் சேகர்பாபு விடுத்த செய்திக்குறிப்பில் வடபழனி முருகன் கோவிலுக்கு சொந்தமான ரூ.250 கோடி மதிப்பிலான 5.5 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் தற்போது மீட்கப்பட்டுள்ளது.ஏற்கனவே திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்ட நிலையில் அடுத்தபடியாக இன்று வடபழனி கோவிலுக்கு சொந்தமான இடமும் மீட்கப்பட்டுள்ளது.

இதே போல் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தை யார் ஆக்கிரமிப்பு செய்தாலும் சட்டம் தன் கடமையை செய்யும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.