கொரோனா நோயாளிகளை மருத்துவமனையில் சந்திக்க தடை !

 

தமிழகத்தில் கொரோனா 2வது அலை மிகத்தீவிரமாக பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் மே 24 வர முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இருந்த போதிலும் பாதிப்புக்களும், உயிரிழப்புக்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதனையடுத்து கொரோனா பரவல் தேசிய பேரிடராக அறிவிக்கப்பட்டு போர்க்கால அடிப்படையில் தடுப்பு முறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை மருத்துவக் கல்வி இயக்குனருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அதன்படி, மற்றொருவருக்கு தொற்று ஏற்படுத்துவது தடை செய்யப்பட்டு உள்ளது. எனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக அறிவிக்கப்பட்ட மருத்துவ நிறுவனங்கள், கொரோனா சுகாதார மையங்களில் உள்ள தனிமைப்படுத்தும் வார்டுகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. பாதிப்பு உள்ளவர்களை சந்திக்க வருபவர்கள், மற்றும் கவனிக்க வருபவர்களை அதிகாரத்தை பயன்படுத்தி தடை செய்ய வேண்டும். நோயாளிகளை கவனிக்க ‘அட்டெண்டர்’ அவசியமாகும் பட்சத்தில், ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டு உள்ள கொரோனா பரவல் தடுப்பு நடைமுறைகளையும் பின்பற்ற வேண்டியது மிக அவசியம். அத்துடன் நோயாளியின் நிலை குறித்த தகவல்களை அவர்களின் உறவினர்களுக்கு அளிக்கும் வசதியும் செய்து தரப்பட வேண்டும் என மருத்துவக் கல்வி இயக்குனர், மருத்துவம் மற்றும் ஊரக சுகாதார சேவைகள் இயக்குனருக்கு பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்து துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.