இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1,000 திட்டம் எப்போது தொடங்கப்படும்?!

 

தமிழகத்தில் ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றது முதல் துறை வாரியாக பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் கடந்த வாரம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ‘பொங்கல் பரிசு’ தொகுப்பு வழங்கப்படும் என அறிவித்தார்.


அதிமுக ஆட்சியில் கடந்த ஆண்டு பொங்கல் தொகுப்புடன் ரூ. 2,500 வழங்கப்பட்டது. இதே போல் ரொக்கப்பரிசு இல்லை என்ற ஆதங்கத்தில் பெண்கள் உள்ளனர். இதே போல் தேர்தல் வாக்குறுதியில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 எப்போது வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பும் மக்களிடையே எழுந்துள்ளது.


இதுகுறித்து முதல்வர் அலுவலக வட்டாரங்கள் ‘தமிழக அரசின் ‘பொங்கல் பரிசு’ திட்டம் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பது அவரது கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.அடுத்தடுத்து எழும் இயற்கை பேரிடர், கொரோனா காரணமாக தமிழக அரசின் நிதி சூழல் சரியாக இல்லை. ஒவ்வொரு மாதமும் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை எப்படி தொடங்குவது? என பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

அதே நேரத்தில் அடுத்து வர இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு கட்டியம் கூறும் வகையில் பொங்கல் தினத்தில் இல்லத்தரசிகளுக்கு மாதம் தோறும் ரூபாய் 1,000 வழங்கும் திட்டம் தொடங்கப்படலாம். இதனால் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு முன்னரே வெளியிடப்படலாம் எனத் தெரிவித்துள்ளது.