தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா!?முதல்வர் ஆலோசனை!

 

தமிழகத்தில் கொரோனா 2வது அலை மிகத் தீவிரமாகபரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு தடுப்பு முறைகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வந்தது. இருந்த போதிலும் பாதிப்புக்களும், உயிரிழப்புக்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தன.

இந்நிலையில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தும் வகையில் தளர்வில்லா ஊரடங்கை மே 31 வரை தமிழக அரசு அமுல்படுத்தியுள்ளது.அத்துடன் பொதுமக்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்கவும், ஊரடங்கிற்கு ஒத்துழைப்பு வழங்கும்படியும் முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்த சூழலில் தமிழகத்துக்கு தேவைப்பட்டால் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு நீட்டிக்கப்படும் என ஸ்டாலின் நேற்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் முழு ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுவது குறித்தும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 11 மணிக்கு ஆலோசனை நடத்த இருக்கிறார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் மருத்துவம், வருவாய்துறை, பொதுத்துறை மற்றும் காவல் துறை உயரதிகாரிகள் பங்கேற்க இருப்பதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து புதிய அறிவிப்பு வெளியிடப்படலாம் எனவும் எதிர்பார்ப்பு உருவாகி வருகிறது.