அரசுப்பணியில் சிலம்பம் வீரர்களுக்கும் இட ஒதுக்கீடு- அரசாணை வெளியீடு..!

 

சட்டப்பேரவையில் அறிவித்த படி சிலம்பம் விளையாடும் வீரர்களுக்கு இட ஒதுக்கீடு அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

முன்னதாக சட்டசபையில் உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின், தமிழ்நாடு அரசு மற்றும் பொதுத்துறை நிறுவன பணியிடங்களில் சிறந்த சிலம்பம் விளையாட்டு வீரர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று அறிவித்தார்.

அதன்படி ஏற்கனவே அமலில் இருந்து வரும் 3 சதவீத விளையாட்டு இட ஒதுக்கீட்டின் கீழ் சிலம்பம் விளையாட்டையும் சேர்ப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. அது தற்போது முழுமை அடைந்துள்ளது.

அதன்படி தமிழக அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களுக்கான பணியிடங்களில் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான 3% இடஒதுக்கீட்டில் சிலம்பம் விளையாட்டையும் சேர்த்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக அமைச்சர் மெய்யநாதன் வெளியிட்டுள்ள தகவலில், தேசிய மற்றும் மாநில அளவில் சிலம்பப் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் இந்த இடஒதுக்கீடு பெற தகுதியானவர்கள் என்று தெரிவித்துள்ளார். ஏற்கனவே மத்திய அரசின் புதிய கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் சிலம்பம் விளையாட்டு சேர்க்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.