T20 World Cup: Super 12 – இன்று ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதல்

 

ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 17ம் தேதி தொடங்கி நவம்பர் 14 வரை நடைபெற்று வரும் 7-வது 20 ஓவர் உலகக் கோப்பை போட்டிகள் துபாய் சர்வதேச மைதானம், அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் மைதானம், ஷார்ஜா மைதானம் மற்றும் ஓமான் கிரிக்கெட் அகாடமி ஆகிய மைதானங்களில் நடைபெறுகின்றன.

அக்டோபர் 22 ஆம் தேதி வரை நடைபெற்ற லீக் போட்டியில் குரூப்-1-ல் இருந்து இலங்கை, வங்காளதேசம் அணிகளும், குரூப்-2-ல் இருந்து ஸ்காட்லாந்து, நமிபியா அணிகளும் சூப்பர்-12 சுற்றுக்கு தகுதி பெற்றது.

சூப்பர்-12 சுற்றில் குரூப்-1-ல் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகளும், குரூப்-2-ல் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து, நமிபியா ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.

இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். சூப்பர்-12 லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குள் நுழையும்.

சூப்பர்-12 சுற்றின் முதல் நாளான இன்று (சனிக்கிழமை) இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகிறது. இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு அபுதாபியில், சயீத் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.