தமிழகத்தில் 50 சதவீத பேருந்துகளை இயக்க முடிவு! தமிழக அரசு!

 

தமிழகத்தில் கொரோனா 2வது அலை படிப்படியாக குறைந்து வருகிறது. இதனையடுத்து பாதிப்பு குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் கட்டுப்பாடுகளுடன் கூடிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்த 27 மாவட்டங்களில் 50 சதவீத பேருந்துகளை மாவட்டத்திற்குள் இயக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா காரணமாக பேருந்துகள் இயக்கப்படாமல் இருக்கிறது. பாதிப்பு குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் அதிகமான ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று அதிகமாக உள்ள 11 மாவட்டங்களில் தளர்வுகள் குறைவாக உள்ளது.

27 மாவட்டங்களில் டாஸ்மாக், தேநீர் கடைகள் திறந்த நிலையில் இந்த வார இறுதிக்குள் 50 சதவீத பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதனால் போக்குவரத்து கழகங்கள் 50 சதவீத பேருந்துகளை இயக்கும் வகையில் ஆயத்தமாகி வருவதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டதும் அரசு பேருந்துகள் இயக்கப்படும் எனவும் இந்த பேருந்து சேவைகள் குறிப்பிட்ட மாவட்டத்திற்குள்ளேயே இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.