கலெக்டர்கள் அவர்களுடைய அதிகாரத்தை முழுமையாக பயன்படுத்த அறிவுறுத்தல்!

 

தமிழகத்தில் கொரோனா 2வது அலை படிப்படியாக குறைந்து வருகிறது. பாதிப்பு ஊரடங்கு காரணமாக தொற்றின் பரவலின் வேகம் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. தொடக்கத்தில் தினசரி பாதிப்பு 36000 என்ற நிலை தற்போது 13000க்கும் கீழே குறைந்துள்ளது.


இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜுன் 17ம் தேதி டெல்லியில் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார். தமிழகத்தின் கொரோனா தொற்றின் நிலை, தமிழகத்தில் கொரோனா தடுப்பு மருந்து உற்பத்தி போன்ற சில திட்டங்களுக்கு விரைவாக அனுமதி பெறவும் முதலமைச்சர் முடிவு செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய தொற்றின் நிலை பற்றி அறிந்து கொள்வதற்காகவும், மாவட்ட அளவில் மேற்கொள்ளப்படும் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் பற்றி ஆய்வு செய்வதற்காகவும் இன்று மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். காணொலி காட்சி மூலம் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

அப்போது, கொரோனா தொற்று பரவாமல் தடுக்க மாவட்ட ஆட்சியர்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து எடுத்துக் கூறிய முதல்வர், தொற்று எண்ணிக்கையை மேலும் குறைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினார்.


மேலும், கல்வி, வேலைவாய்ப்பில், சமூக பொறுப்புகளில் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க மாவட்ட ஆட்சியர்கள் அதிகாரத்தை, பதவியை பயன்படுத்தி தங்களது கடமையை ஆற்ற வேண்டும். தமிழக அரசு முன்வைத்துள்ள வளரும் வாய்ப்புகள், வளமான தமிழ்நாடு, மகசூல் பெருக்கம், மகிழும் விவசாயிகள் உள்ளிட்ட 7 இலக்குகளை 10 ஆண்டுக்குள் எட்டிட மாவட்ட ஆட்சியர்களின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் அறிவுறுத்தினார்.

பொதுவிநியோகத் திட்டத்தை முறையாக செயல்படுத்திட வேண்டும், மக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் போலி குடும்ப அட்டைகள் ஒழிக்கப்பட வேண்டும் என்றும் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.