தமிழகம் முழுவதும் கொரோனா விழிப்புணர்வு வாரம்! உணவகங்களுக்கு கடும் எச்சரிக்கை!!

 

தமிழகம் முழுவதும் உள்ள ஹோட்டல்களில் கொரோனா விதிகளுக்கு எதிராக 50 சதவிகிதத்துக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் அனுமதிக்கப்பட்டால் உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா 2வது அலை சற்று ஓய்ந்த நிலையில் தற்போது மீண்டும் நோய் பரவல் தமிழகத்தில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆகஸ்ட் முதல் வாரம் கொரோனா விழிப்புணர்வு வாரமாக கடைப்பிடிக்கப்படுகிறது. அதனை கடந்த ஞாயிறு அன்று முதல்வர் சென்னையில் தொடங்கி வைத்த நிலையில், நேற்று மாவட்டந்தோறும் ஆட்சியர்கள் தொடங்கி வைத்தனர்.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த, வரும் 9ம் தேதி வரை கூடுதலாக எவ்வித தளர்வுகளும் இன்றி ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. அண்டை மாநிலங்களிலும், தமிழகத்தின் சில பகுதிகளிலும், நோய்த் தொற்று சற்று அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் சென்னை மாநகராட்சி சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதில், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக் கூடாது என்ற நோக்கில் வழங்கப்பட்ட தளர்வுகளை சரியான முறையில் பின்பற்றப்பட வேண்டியது அவசியமாகிறது.

ஓட்டல்கள் மற்றும் உணவகங்களில் 50% இருக்கைகளில் மட்டுமே பொதுமக்கள் அமர்ந்துஉணவருந்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

50 சதவீதத்துக்கும் மேல் உணவருந்த அனுமதிக்கும் ஓட்டல் மற்றும் உணவகங்களுக்கு அபராதம் விதிக்கப்படும். மேலும் அவர்களுக்கான தொழில் உரிமமும் ரத்து செய்யப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.