இன்று முதல் ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரணத் தொகை ரூ2000 மளிகைப் பொருட்கள்!

 

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஏழை எளிய மக்கள் வாழ்வாதாரம் இழந்து பெருமளவு பாதிக்கப் பட்டுள்ளனர். இவர்களின் குறைகளை போக்கும் வகையிலும், முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் அளித்த வாக்குறுதியின் படியும் கொரோனா நிவாரண நிதி முதல் தவணை மே மாதம் வழங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக 2வது தவணை தொகையான ரூ.2 ஆயிரம் மற்றும் 14 மளிகை பொருட்கள் அடங்கிய பை இன்று முதல் இந்த மாத இறுதிவரை அனைத்து ரேஷன் கடைகளிலும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி விடுத்த செய்திக்குறிப்பில் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்றதும், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.4 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி என அறிவித்திருந்தார்.

Minister for Food and Civil Supplies R. Sakkarapani

அந்தத் தொகையை ரூ.2000 வீதம் இரண்டு தவணைகளாக வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.அதன்படி ஜூன் 3 முதல் தவணை நிவாரணத் தொகை ரூ.2000/- கொடுக்கப்பட்டு வருகிறது. ஊரடங்கு காலத்தில் வெளியூரில் சென்று தங்கியவர்கள், தங்களின் ரேஷன் கடைகளில் அவற்றை பெற முடியாமல் இருப்பதால், ஜூன் மாதத்தில் எந்தத் தேதியிலும் முதல் தவணைத் தொகையை பெற்றுக்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது 2வது தவணைத் தொகையான ரூ.2000/- ஜூன்15 முதல் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது. அந்தத் தொகையுடன் 14 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய பையும் இலவசமாக வழங்கப்படும். அவற்றை பெறும்போது ரேஷன் கடைகளில் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி பெற்றுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.