இன்று முதல் 61 நாட்களுக்கு மீன் பிடி தடைக்காலம்! காய்கறிகள் விலை உயர்வு!
தமிழகத்தில் எல்லைப்பகுதியில் ஒரு பகுதி முழுவதுமே கடற்கரையால் தான் சூழப்பட்டுள்ளது. கடல் வளத்தை பாதுகாக்கவும், மீன்கள் இனப்பெருக்கத்திற்கும் ஒவ்வொரு ஆண்டும் மீன்பிடித் தடைக்காலம் அறிவிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் கன்னியாகுமரி முதல் கிழக்கு கடலோரப் பகுதிகள் வரை இருக்கும் கடலோரப் பகுதிகளில் ஏப்ரல்15 முதல் 61 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கன்னியாகுமரி அருகே சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகப் பகுதி தொடங்கி, திருவள்ளூர் மாவட்டம் வரையான கிழக்கு கடலோரப் பகுதிகள் முழுவதும், 61 நாட்களுக்கான மீன்பிடிதடைக்காலம் இன்று தொடங்கியது. இத்தடைக் காலத்தில் இழுவலை விசைப்படகுகள், தூண்டில் வலை விசைப்படகுகளை பயன்படுத்தி மீன்பிடிக்கக் கூடாது.தடையை மீறி மீன்பிடி தொழில் செய்வோர் மீது தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டத்தின்கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சம்பந்தப்பட்ட விசைப்படகின் பதிவு ரத்து செய்யப்படுவதுடன், மானிய விலையில் வழங்கப்படும் டீசலும் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், கரையோரப் பகுதிகளில் மீன் பிடிக்கும் நாட்டுப்படகுகள், பைபர் படகுகள் வழக்கம் போல் கடலுக்குள் மீன்பிடிக்கலாம். மீன்பிடி தடைக்காலம் அறிவிக்கப்பட்டிருப்பதால் ஆழ்கடலில் இருந்த அனைத்து விசைபடகுகளும் கரை திரும்பியுள்ளன.மீன்பிடி தடைக்காலம் தொடங்கியதால், இன்னும் இரண்டு மாதங்களுக்கு காய்கறி விலைகள் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
dinamaalai.com