குட் நியூஸ்! அரசு பள்ளி மாணவர்களுக்கு இதுவும் இலவசம்!

 


தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்டுள்ள தொடர் ஊரடங்கு காரணமாக ஓராண்டுக்கும் மேலாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இருப்பினும், மாணவர்களின் நலன் கருதி ஆன்லைன் வகுப்புகள் மற்றும் கல்வி தொலைக்காட்சி மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

சில நாட்களுக்கு முன்பு, நடப்பு கல்வியாண்டுக்கான வீடியோ தொகுப்பை கல்வி தொலைக்கட்சி மூலம் ஒளிபரப்பும் திட்டத்தை முதல்வர் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இருந்து தொடங்கி வைத்தார்.அத்துடன், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இலவச புத்தகங்களும் வழங்கப்பட்டுள்ளன. ஆனாலும், இப்போதைக்கு பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை.


இந்நிலையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 2 லட்சம் விலையில்லா மூக்குக் கண்ணாடிகள் வழங்கப்படும் என பள்ளிக் கல்வி ஆணையர் தெரிவித்துள்ளார். பார்வை குறைபாடு உள்ள மாணவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு கல்வித்துறை சார்பில் விலையில்லா மூக்குக் கண்ணாடிகள் வழங்கப்படும். பள்ளிகளுக்கு மாணவர்களை வரவழைத்து மூக்கு கண்ணாடி வழங்க அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.