தமிழகத்தில் ஒமைக்ரான் பரவல்?! சுகாதாரத் துறை விளக்கம்!!

 

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனாவின் பாதிப்பிலிருந்தே உலக நாடுகள் முழுவதுமாக மீளவில்லை. தற்போது தென்னாப்பிரிக்காவில் புதிய வகை வைரஸ் ஒமைக்ரான் கண்டறியப்பட்டுள்ளது.

இதனை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்திலும் பல தடுப்பு முறைகளும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அந்த வகையில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் தற்போது வரை தமிழகத்தில் ஒமைக்ரான் வைரஸ் பரவல் கண்டறியப்படவில்லை. அதை தடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மத்திய, மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை விமான நிலையத்தில் பரிசோதனை செய்து தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.


ஒமைக்ரான் வகை வைரஸ் தமிழகத்தில் பரவும் நிலையில் அதனை எதிர்கொள்ளத் தேவையான மருந்துகள், ஆக்சிஜன் வசதிகள், முகக்கவசங்கள் ஆகியவை கையிருப்பில் உள்ளது. அடுத்த 3 மாதங்களுக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


மேலும் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 150 படுக்கைகளும், ஸ்டான்லி மருத்துவமனையில் 75 படுக்கைகளும், ஓமந்தூரார் மருத்துவமனையில் 50 படுக்கைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.


இது தவிர கிண்டி கொரோனா மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைகளிலும் ஒமைக்ரான் வகை வைரசுக்கு சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதனால் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.