கேரண்டி தேவையில்லை…! அடமானமும் வேண்டாம்!! இந்தியா முழுவதும் வங்கிகளில் தொழில் தொடங்க ரூ.10 லட்சம் வரை ஈஸியா கடன் பெறலாம்!!
எந்த ஒரு சொத்தும், ஆவணமும் பிணையாக இல்லாமல் ரூ.10 லட்சம் வரை மத்திய அரசின் முத்ரா திட்டத்தின் கீழ், தொழில் தொடங்க கடன் வழங்கப்படுகிறது.
சொந்தமாக தொழில் தொடங்க ஆசையும், அதற்கான திட்டங்களும் இருப்பவர்களுக்கு முதலீடு என்பது பெரிய கேள்விக்குறியாக உள்ளது. கடன் வாங்கலாம் என்றாலும் வட்டியைத் தாண்டி கடன்பெறவே பிணை, ஆவணம் என நடைமுறை சிக்கல்களை சந்திக்க வேண்டியுள்ளது. ஆனால், இனி அந்த கவலை இல்லை. இளைஞர்களுக்கும், தொழில் முனைவோருக்கும் உதவும் வகையில் முத்ரா திட்டத்தின் கீழ் பிணை இல்லாமல் ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. முத்ரா திட்டத்தின் கீழ் கடன் பெறுவதற்கான வழிமுறைகள் மற்றும் மற்ற தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
ஆவணங்கள்
இந்தியாவில் இதுவரை 29 வங்கிகள் முத்ரா திட்டத்தின் கீழ் கடன் வழங்கி வருகிறது. நமது தொழில் நிறுவனத்துக்கு அருகில் உள்ள வங்கியை தேர்ந்தெடுத்து, வணிகம் சார்ந்த முழு திட்டத்தையும் எழுத்து வடிவில் தயார் செய்து கொள்ள வேண்டும்.
அடையாள சான்று
இருப்பிட சான்று
இயந்திரங்கள் மற்றும் பிற பொருட்களின் மேற்கோள்கள் (quotations)
பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்
வணிக அடையாளத்தின் சான்று
வணிக முகவரியின் சான்று
ஆகிய சான்றுகளை தயார் செய்து கொள்ள வேண்டும். முத்ரா திட்டத்திற்கு உத்திரவாதம் தேவையில்லை. செயல்பாட்டு கட்டணமும் கிடையாது
ஆன்லைன் விண்ணப்பித்தல்
முத்ரா கடன் திட்டத்தின் கீழ் கடன் வழங்குவதற்காக அங்கீகாரம் அளிக்கப்பட்ட அனைத்து விதமான 29 வங்கிகளின் வலைதளங்களிலும் இத்திட்டத்தின் கீழ் கடன் பெறுவதற்கான விண்ணப்ப படிவங்கள் கிடைக்கும். முத்ரா கடன் திட்டத்தை நேரடியாக பெறுவதைவிட ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து பெறுவதன் மூலம் காத்திருத்தலை தவிர்த்து விரைவாக கடன் தொகையை பெற முடியும். ஆன்லைன் முத்ரா கடன் விண்ணப்பித்தல் முறைக்கும் மேலே குறிப்பிடப்பட்ட அனைத்து விதமான ஆவணங்களையும் தயார் செய்து கொள்வது அவசியம்.
முத்ரா திட்டத்தின் கீழ் கடன் வாங்குபவர்கள் 3 வகைகளாக பிரிக்கப்படுவார்கள்.
சிஷூ – ரூ. 50,000 வரை கடன் பெறுபவர்கள்
கிஷோர் – ரூ. 50,000 முதல் ரூ.5 லட்சம் வரை கடன் பெறுபவர்கள்
தருண் – ரூ. 5 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரை கடன் பெறுபவர்கள்
விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யும் முறை
சிஷு கடன் பெறுவதற்கு தனியாகவும் கிஷோர், தருண் கடன் பெற தனி விண்ணப்பமும் நடைமுறையில் உள்ளது. கிஷோர் மற்றும் தருண் பிரிவில் ஒரே விண்ணப்பம் இருப்பதால் அதில் எந்த பிரிவின் கீழ் கடன் பெற வேண்டுமோ அதை தெளிவாக குறிப்பிட வேண்டும். கடன் பெறவுள்ள வங்கியின் பெயர் மற்றும் வங்கிக் கிளையின் பெயரை தெளிவாக குறிப்பிட வேண்டும். பெயர், பெற்றோர்கள் பெயர், முகவரி, மதம், நேஷனலிடி, ஆதார் அடையாள எண், போன்றவற்றை தெளிவாக குறிப்பிட வேண்டும்.
இதற்கு முன்னர் கடன் தொகை பெற்று இருந்தால் அதற்கான சான்றிதழ்களையும் இணைக்க வேண்டும். கூட்டு சேர்ந்து வணிகத்தை நடத்தினால் கூட்டாளியின் பெயர் மற்றும் இதர தகவல்களையும் தெரிவிக்க வேண்டும்.
குறிப்பு : முத்ரா திட்டத்தின் கீழ் வாங்கும் கடன் தொகைக்கான வட்டி விகிதம் அரசாங்கத்தால் முறைப்படுத்தப்படவில்லை வெவ்வேறு வங்கிகள் வெவ்வேறு வட்டி விகிதங்களில் முத்ரா திட்ட கடன்களை வழங்கி வருகின்றன. எனவே, கடன் வாங்குவதற்கு முன் நாம் வாங்கும் வங்கியில் முத்ரா திட்டத்தின் கீழ் வட்டி விகித தகவல்களை கேட்டறிந்து கொள்வது நல்லது.