தமிழகத்தில் ஜூன் 21 வரை ஊரடங்கை நீட்டிக்க பரிந்துரை.. ! டாஸ்மாக் திறக்க வாய்ப்பு?

 

தமிழகத்தில் கொரோனா 2வது அலையை கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்டிருந்த தளர்வுகள் அற்ற ஊரடங்கு ஜூன் 14ம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகள் கட்டுப்பாடுகள் குறித்த முழு தகவல்கள்.

கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல்,தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய பாதிப்பு அதிகம் உள்ள 11 மாவட்டங்களை தவிர மற்ற இடங்களுக்கு மட்டும் தளர்வுகள் அறிவிக்கப் பட்டுள்ளன.

இந்த நிலையில், ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாகவும், கூடுதல் தளர்வுகள் வழங்குவது தொடர்பாகவும் தமிழக அரசின் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், வருவாய் துறை முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த், டி.ஜி.பி. திரிபாதி, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் (ஜூன் 21 வரை) ஊரடங்கை நீட்டிக்க உயர் அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர். தொற்று அதிகமுள்ள மாவட்டங்களைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் புதிய தளர்வுகள் குறித்து நாளை அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.