மீண்டும் உயரும் சிமெண்ட் விலை: கட்டுப்படுத்த நடவடிக்கைகள் தேவை! – டாக்டர் ராமதாஸ்

 

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்..

தமிழ்நாட்டில் சிமெண்ட் விலை கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ரூ.120 வரை உயர்ந்திருக்கிறது. எந்தவித நியாயமான காரணங்களும் இல்லாமல் சிமெண்ட் விலை உயர்வது கட்டுமானத்துறையையும், அதை சார்ந்துள்ள பணியாளர்களின் வாழ்வாதாரங்களையும் மட்டுமின்றி, பொருளாதார வளர்ச்சியையும் மோசமாக பாதிக்கும். இதை உணராமல் இந்த விஷயத்தில் அரசு அலட்சியம் காட்டுவது கவலை அளிக்கிறது.

தமிழ்நாட்டில் கடந்த வாரம் வரை 50 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை சிமெண்ட்டின் விலை ரூ.350 அல்லது அதற்கும் குறைவாகத் தான் இருந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக சிமெண்டின் விலை ரூ.450 முதல் ரூ.470 வரை விற்கப்படுகிறது. இது இயல்பான விலை உயர்வாகத் தோன்றவில்லை. சிமெண்ட் உற்பத்திக்குத் தேவையான நிலக்கரியின் விலை உயர்ந்து வருவதால், சிமெண்ட் மூட்டைக்கு ரூ.60 வரை உயரக்கூடும் கடந்த 7-ஆம் தேதி தென்னிந்திய சிமெண்ட் உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்தது. அவ்வாறு அறிவிக்கப்பட்ட சில நாட்களிலேயே சிமெண்ட் விலை, அதன் உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்ததை விட இரு மடங்கு, அதாவது ரூ.120 அதிகரித்துள்ளது. இதை வைத்துப் பார்க்கும் போது சிமெண்ட் நிறுவனங்கள் விலையை உயர்த்த நிலக்கரி தட்டுப்பாட்டை பயன்படுத்திக் கொண்டதாகவே தோன்றுகிறது. இது நியாயமற்றது ஆகும்.

நிலக்கரி தட்டுப்பாடு என்பது தமிழ்நாட்டில் மட்டும் நிலவும் தனித்துவமான சிக்கல் இல்லை. இந்தியா மட்டுமின்றி, உலக நாடுகள் அனைத்திலும் கடுமையான நிலக்கரித் தட்டுப்பாடு நிலவுகிறது. ஆனால், இந்தியாவின் பிற மாநிலங்களிலோ அல்லது வெளிநாடுகளிலோ சிமெண்ட் விலை சிறிதும் உயரவில்லை. ஆந்திராவிலும், தெலுங்கானாவிலும் இப்போதும் ஒரு மூட்டை சிமெண்ட் விலை ரூ.350 என்ற அளவில் தான் உள்ளது. தமிழ்நாட்டில் சிமெண்ட் விலை உயர்ந்து விட்டதால், வட தமிழ்நாட்டைச் சேர்ந்த கட்டுமான நிறுவனங்கள் ஆந்திராவிலிருந்து மூட்டை ரூ.350-க்கும் குறைவான விலையில் இறக்குமதி செய்கின்றன. துருக்கி, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து தமிழகத்தில் விற்பனை செய்யப்படுவதை விட பாதிக்கும் குறைவான விலையில் சிமெண்ட்டை இறக்குமதி செய்ய முடியும்.

நிலக்கரி தட்டுப்பாட்டைக் காரணம் காட்டி உலகின் எந்த மூலையிலும் சிமெண்ட் விலை உயர்த்தப்படாத நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் சிமெண்ட் விலை மூன்றில் ஒரு பங்கு, அதாவது 33% எப்படி உயர முடியும்? இவ்வாறு காரணமே இல்லாமல் சிமெண்ட் விலை உயர்த்தப்படும் போது, அதில் தலையிட்டு சிமெண்ட் விலையை முறைப்படுத்த வேண்டிய கடமை தமிழக அரசுக்கு உண்டு. அதை அரசு நிறைவேற்ற வேண்டும்.

கடந்த ஜூன் மாதத்தில் சிமெண்ட் விலை மிகப்பெரிய அளவில் உயர்ந்த நிலையில், அதைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தியது. அதைத்தொடர்ந்து தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளின் பயனாக சிமெண்ட் விலை ரூ.30 குறைக்கப்பட்டது. ஆனால், அரசின் கண்காணிப்பும், கட்டுப்பாடுகளும் தளர்ந்து விட்ட நிலையில், இப்போது சிமெண்ட் விலை மீண்டும் உயர்ந்திருக்கிறது. சிமெண்ட் விலையை கட்டுப்படுத்துவதற்காக, டான்செம் நிறுவனத்தின் சிமெண்ட் உற்பத்தி 17 லட்சம் டன்னாக உயர்த்தப்படுவதாக அரசு அறிவித்தது. அதன்பிறகும் சிமெண்ட் விலை உயருவதற்கு நியாயமான காரணங்கள் எதுவுமில்லை. இத்தகைய சூழலில் சிமெண்ட் விலை, இயல்புக்கு மாறான வகையில், உயர்த்தப்படுவதைத் தடுக்க தமிழக அரசு உறுதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக அரசு நினைத்தால் சிமெண்ட் விலையை உடனடியாக கட்டுக்குள் கொண்டு வர முடியும். தமிழக அரசின் சார்பில் வலிமை என்ற பெயரில் சிமெண்ட் வெளிச்சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று சட்டப்பேரவையில் தொழில்துறை அமைச்சர் அறிவித்திருந்தார். 2021&ஆம் ஆண்டு இறுதிக் கட்டத்தை நெருங்கி விட்ட நிலையில், வலிமை சிமெண்டை விற்பனைக்கு கொண்டு வர அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டிலுள்ள சிமெண்ட் உற்பத்தி நிறுவனங்களின் பிரதிநிதிகளை அரசு அழைத்துப் பேசி சிமெண்ட் விலையை குறைக்கும்படி அறிவுறுத்த வேண்டும்.

வெளிநாடுகளில் இருந்து மிகக்குறைந்த விலையில் சிமெண்டை இறக்குமதி செய்வதற்கான வாய்ப்புகள் இருக்கும் போது, மத்திய அரசின் அனுமதியுடன் சிமெண்டை இறக்குமதி செய்து குறைந்த விலையில் விற்பனை செய்ய தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவை அனைத்திற்கும் மேலாக தமிழகத்தில் சிமெண்ட் விலையை ஒழுங்குபடுத்த தனி ஆணையத்தை தமிழக அரசு அமைக்க வேண்டும்.