குழந்தை இறந்த சோகம்!! உயிரை மாய்த்து கொண்ட நர்ஸ் தாய்!!
மகளின் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்ததை காணச் சகிக்காமல் செவிலியர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியைச் சேர்ந்தவர் வினோத் குமார் மற்றும் ஆஷா தம்பதி. காதலித்து திருமணம் செய்துகொண்ட இவர்களுக்கு ஒரு மகள் இருந்தார். கணவர் வினோத் குமார் திருப்பூரில் கூலித் தொழில் செய்து வரும் நிலையில், தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தார் ஆஷா.
தம்பதியின் ஒரு வயது மகள் கவியாழினிக்கு உடல்நிலை சரியில்லாமல் போயுள்ளது. அதற்காக தான் பணியாற்றும் தனியார் மருத்துவமனையில் மகளை அனுமதித்து மருத்துவம் பார்த்து வந்தார் ஆஷா. திருப்பூரில் இருந்த வினோத் குமார் பலமுறை மனைவி அழைத்தும் மகளை வந்து அவர் பார்க்கவில்லை.
தொடர்ந்து குழந்தை கவியாழனிக்கு உடல்நிலை மோசமடைந்து கொண்டே சென்றது. இதுகுறித்து வினோத் குமாருக்கு தகவல் கூறியுள்ளார் ஆஷா. ஆனால் அப்போதும் கணவர் வினோத் வரவில்லை. இதனால் மிகவும் மனமுடைந்து போயுள்ளார். இந்நிலையில் நேற்று ஆஷாவின் வீட்டு கதவு வெகுநேரமாகியும் திறக்கப்படாமல் இருந்துள்ளது.
இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து கதவை உடைத்து பார்க்கும் போது, ஆஷா மின் விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையிலும் மகள் கவியாழினி தரையில் உயிரிழந்து கிடந்ததையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இருவருடைய உடலையும் கைப்பற்றிய போலீசார் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடல் நலக்குறைவால் குழந்தை இறந்திருக்கலாம் எனவும், அதனால் மனமுடைந்து ஆஷா தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.