மும்பை விமான நிலையத்தை கைப்பற்றியது அதானி குழுமம்..!

 


மும்பை சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாக பொறுப்பை கைப்பற்றியுள்ளது அதானி குழுமம். இந்த உரிமையைக் கைப்பற்றியதன் மூலம் அதானி ஏர்போர்ட் ஹோல்டிங்ஸ் தற்போது இந்திய விமான நிலையங்களின் நிர்வகிப்பில் 25 சதவீத பங்களிப்பையும், உலகம் முழுவதும் உள்ள மொத்தம் 8 விமான நிலையங்களின் நிர்வாக உரிமையை கொண்டுள்ளதால் விமான சரக்குப் போக்குவரத்திலும் 33 சதவீத பங்களிப்பையும் கொண்டுள்ளது.

இதனால், நாட்டின் மிகப்பெரிய விமான நிலைய நிர்வகிப்பு நிறுவனமாக அதானி குழுமம் உருவெடுத்துள்ளது.இது குறித்து அதானி குழுமத்தின் தலைவர் விடுத்த செய்திக்குறிப்பில் “உலகத்தரம் மிக்க மும்பை விமான நிலையத்தின் நிர்வாக உரிமையைப் பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. வர்த்தக ரீதியாகவும், பயணிகள் வருகையிலும் இரண்டாவது பெரிய விமான நிலையம் இது.

அதானி நிறுவனத்தின் விரிவாக்க உத்திகள் மூலம் உலகத்தரத்தில் விமான நிலையங்களை மேம்படுத்தி டயர் 1 நகரங்களை டயர் 2 மற்றும் டயர் 3 நகரங்களுடன் இணைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இதன்மூலம் நகரம், கிராமம் என்கிற வேறுபாடு குறைக்கப்படும்.மேலும், நவி மும்பை சர்வதேச விமான நிலைய கட்டுமான செயல்பாடுகள் அடுத்த மாதத்திற்குள் தொடங்கப்படும் எனவும், 2024ல் மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படும்” எனவும் தெரிவித்துள்ளார்.