தைவான் வான்வெளியில் போர் விமானங்களை பறக்கவிட்ட சீனா - டிரம்ப் வருகைக்கு முன் அடாவடி... ராஜதந்திரமா? போர் ஒத்திகையா? பதைபதைக்கும் உலக நாடுகள்!
Mar 16, 2026, 22:34 IST
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீனாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், தைவான் வான்வெளியில் சீனா மீண்டும் தனது போர் விமானங்களை ஏவி இருப்பது சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த இரண்டு வாரங்களாக நிலவி வந்த மர்மமான அமைதியைக் கலைக்கும் விதமாக, சீனா மீண்டும் தைவானை நோக்கி தனது போர் விமானங்களை அனுப்பத் தொடங்கியுள்ளது. இது வெறும் எச்சரிக்கை விடுக்கவா அல்லது ஒரு பெரிய அளவிலான இராணுவ சதித்திட்டத்தின் தொடக்கமா என்ற கேள்வியை உலக நாடுகளின் பாதுகாப்பு நிபுணர்கள் மத்தியில் எழுப்பியுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விரைவில் சீனாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இதற்கிடையில் அமெரிக்கா தைவானுக்கு மிகப் பெரிய அளவிலான ஆயுத விற்பனை ஒப்பந்தத்தை அறிவிக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீனா தனது ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளைக் குறைப்பதும், பின் மீண்டும் அதிகரிப்பதும் ஒரு வகையான 'பேரம் பேசும்' கருவியாக இருக்கலாம். அமெரிக்காவுடன் தற்போது நடைபெற்று வரும் வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் சில சலுகைகளைப் பெற இந்த மிரட்டல் அரசியலைச் சீனா கையில் எடுத்துள்ளதாகச் சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.