சீக்கிரம் டாஸ்மாக்கைத் தெறங்கப்பா… கார்களில் பதுக்கி மது விற்பனை! 6,900 பாட்டில்கள் பறிமுதல்

 
சீக்கிரம் டாஸ்மாக்கைத் தெறங்கப்பா…  கார்களில் பதுக்கி மது விற்பனை! 6,900 பாட்டில்கள் பறிமுதல்

தமிழகத்தில் கொரோனா 2வது அலை படிப்படியாக குறைந்து வருகிறது. இதனையடுத்து பாதிப்பு கட்டுக்குள் வந்த 27 மாவட்டங்களில் மட்டும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.

அதிலும் குறிப்பாக திருப்பூர், கோவை மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகமாக இருந்ததால் டாஸ்மாக் கடைகள் இதுவரை திறக்கப்படவில்லை. இதனால் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மற்ற மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் மதுபாட்டில்களை கடத்தி வந்து அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதை வாடிக்கையாக்கி வருகின்றனர்.

இதுகுறித்து ரகசிய தகவல் கிடைத்ததும் திருப்பூர் முழுவதும் போலீசார் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தி மது விற்பனை செய்யும் கும்பல்களை கையும், களவுமாக பிடித்துள்ளனர். மேலும் பல லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்.

அதன்படி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள், கழிப்பறைகள் உட்பட பல்வேறு இடங்களில் 144 பெட்டிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.5.50 லட்சம் மதிப்புள்ள 6900 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் மதுபாட்டில்களை பதுக்கிவைத்திருந்த குன்னத்தூர் பகுதியை சேர்ந்த ஜெய்சன் மற்றும் கூட்டாளிகளான கருப்பசாமி, பாலாசிங் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் கர்நாடகா மாநிலத்தில் இருந்து கோழித்தீவனம் ஏற்றி வரும் வாகனத்தில் மதுபாட்டில்களை மறைத்து கடத்தி வந்ததை ஒப்புக் கொண்டனர். டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாத கோவை,திருப்பூர், ஈரோடு போன்ற மாவட்டங்களில் மொத்த வியாபாரம் செய்து வந்ததாக தெரிவித்துள்ளனர்.

From around the web