சென்னை உட்பட 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை... தயார் நிலையில் 120 தீயணைப்பு வீரா்கள் !
தமிழகம் முழுவதும் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து, மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் பெருமளவு வீரர்கள் மீட்பு பணிகளில் ஈடுபடத் தயாராக உள்ளனர்.தற்போது, சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் ஏற்கனவே 900 தீயணைப்பு வீரர்கள், 30 ரப்பர் படகுகள், மற்றும் மீட்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் முகாமிட்டுள்ளனர். அதிக மழைநீர் தேங்கக்கூடிய முடிச்சூர், வேளச்சேரி, தாம்பரம், சேலையூர் உள்ளிட்ட 16 முக்கிய இடங்களில் இவர்கள் நிலைபெற்றுள்ளனர்.

மேலும், திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, சேலம் மாவட்டங்களிலிருந்து 120 கூடுதல் வீரர்கள் மற்றும் 17 ரப்பர் படகுகள் சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.இந்த வீரர்கள் அனைவரும், தீயணைப்புத் துறை டிஜிபி சீமா அகவால் மற்றும் வடக்கு மண்டல இணை இயக்குநர் சத்யநாராயணா மேற்பார்வையில் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணிகளில் ஈடுபடவுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
