தூத்துக்குடியில் 150 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்.. 2 பேர் கைது!

 
ஆட்டோ
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே ஆட்டோவில் கடத்திய 150 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வியாபாரி உள்பட 2பேரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களின் விற்பனை அதிகரித்து வருவதாக புகார் எழுந்துள்ளது. ஆங்காங்கே சட்டவிரோத மதுவிற்பனையும் நடந்து வருகிறது. இதுகுறித்து எஸ்பி ஆல்பர்ட் ஜானுக்கும் பொதுமக்கள் தரப்பில் புகார் தெரிவித்து உள்ளனர்.

இதை தொடர்ந்து உடன்குடி பகுதியில் போதை பொருட்கள் நடமாட்டத்தை ஒழிக்க தீவிர ேராந்து பணியில் ஈடுபடுமாறு குலசேகரன்பட்டினம் போலீசாருக்கு, எஸ்பி உத்தரவிட்டு உள்ளார். இந்த நிலையில், எஸ்பி உத்தரவின் பேரில் தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையில் போலீசார் சந்தேகத்திற்கிடமான கடைகள் மற்றும் குடோன்களில் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

புகையிலை குட்கா

நேற்று முன்தினம் உடன்குடி தேரியூர் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் வந்த ஒரு ஆட்டோவை போலீசார் நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது அதிலிருந்த சாக்குமூட்டைகள் குறித்து டிரைவர் மற்றும் ஆட்டோவில் இருந்தவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பேசினர். இதனையடுத்து போலீசார் ஆட்டோவில் இருந்த மூட்டைகளை சோதனை செய்த போது அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி செல்வது தெரிய வந்தது.

இதை தொடர்ந்து அந்த ஆட்டோவில் கடத்தி வரப்பட்ட 150 கிலோ புகையிலை பொருட்களை தனிப் படையினர் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து கடத்தலுக்கு பயன்படுத்திய ஆட்டோவையும் பறிமுதல் செய்த போலீசார், நடத்திய விசாரணையில், புகையிலை பொருட்களை கடத்தி வந்தவர்கள் உடன்குடி அருகேயுள்ள கொட்டங்காட்டை சேர்ந்த வியாபாரி வசீகரன் என்பதும், அவர் பள்ளிக்கூட மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் விற்பனை செய்வதற்காக புகையிலை பொருட்களை கடத்தி சென்றதும் தெரிய வந்தது. 

புகையிலை

இதை தொடர்ந்து தனிப்படை போலீசார் வியாபாரி வசீகரன் (63) மற்றும் பண்டாரசெட்டிவிளையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஜவகர் கிருபா சாலமன்ராஜ் (42) ஆகிய இருவரையும், ஆட்டோ மற்றும் புகையிலை பொருட்களுடன் குலசேகரன்பட்டினம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து குலசேகரன்பட்டினம் சப்-இன்ஸ்பெக்டர் தனசேகர் வழக்குப்பதிவு செய்து வசீகரன், ஜவகர்கிருபா சாலமன்ராஜ் ஆகியோரை கைது செய்தார். மேலும், இதில் தொடர்புடைய வசீகரன் மகன் அஜீத்தை போலீசார் தேடிவருகின்றனர்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web