தமிழகத்தில் 15 நாட்களில் 16,248 சிறப்பு மருத்துவ முகாம்கள்... 6.78 லட்சம் பேர் பயனடைந்தனர் - அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்!
வடகிழக்கு பருவமழை தொடங்கியதைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் சுகாதாரத் துறை தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. கடந்த 15 நாட்களில் மட்டும் 16,248 மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு 6,78,034 பேர் பயனடைந்துள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் நடைபெற்ற வடகிழக்கு பருவமழை சுகாதார ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது, “மழைக்காலத்தில் காய்ச்சல், டெங்கு, மலேரியா, சிக்கன்குனியா, வயிற்றுப்போக்கு போன்ற நோய்களைத் தடுக்கும் நடவடிக்கைகள் விரிவாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழ்நாடு முழுவதும் 40,000 களப்பணியாளர்கள் காய்ச்சல் தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும் 25,000க்கும் மேற்பட்டோர் கொசு ஒழிப்பு பணிகளில் செயல்படுகின்றனர்” என தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது: “டெங்கு பாதிப்புகள் கண்டறிய 4,755 ஆய்வகங்கள் செயல்படுகின்றன. இதன் மூலம் இதுவரை 2,52,738 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக டெங்கு கட்டுக்குள் உள்ளது. டெங்கு, மலேரியா, டைபாய்டு உள்ளிட்ட நோய்களில் பாதிப்பு விகிதம் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது கணிசமாகக் குறைந்துள்ளது. கடந்தாண்டுடன் ஒப்பிடும்போது வயிற்றுப்போக்கு பாதிப்பு 86,026 இலிருந்து 64,519 ஆகவும், சிக்கன்குனியா 550 இலிருந்து 429 ஆகவும், டைபாய்டு 20,525 இலிருந்து 14,346 ஆகவும் குறைந்துள்ளது” என்றார்.
மேலும், பாம்புக்கடி மற்றும் நாய்க்கடிகளுக்கான சிகிச்சை மருந்துகள் தற்போது அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கிடைப்பதாகவும், சுகாதாரப் பணியாளர்கள் தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மழைக்கால நோய்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாநிலம் முழுவதும் துண்டுப்பிரசுரங்கள் மற்றும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
