நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்யுமா இந்திய கிரிக்கெட் அணி?.. இன்று முக்கிய போட்டி !!

 
sa

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்யும் டாம் லாதம் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் ஐதராபாத்தில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் 12 ரன் வித்தியாசத்திலும், ராய்பூரில் நடந்த 2ஆவது போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்றது. இதன்மூலம் ஏற்கனவே தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. ‘

இந்த நிலையில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கர் ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது. இந்த ஆட்டத்திலும் நியூசிலாந்தை வீழ்த்தி 'ஹாட்ரிக்' வெற்றியுடன் அந்த அணியை 'ஒயிட்வாஷ்' செய்யும் முனைப்பில் இந்திய அணி களம் காணுகிறது. 

team

பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் இந்தியா வலுவாக உள்ளது. முதலாவது ஆட்டத்தில் இரட்டைசதம் விளாசிய சுப்மன் கில் அடுத்த ஆட்டத்தில் ஆட்டம் இழக்காமல் 40 ரன்கள் எடுத்து சூப்பர் பார்மில் இருக்கிறார். விராட்கோலி 2 ஆட்டங்களிலும் (8, 11 ரன்) இடக்கை சுழற்பந்து வீச்சாளரான மிட்செல் சான்ட்னெரிடம் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா ஆகியோருக்கு முந்தைய ஆட்டத்தில் பேட்டிங் வாய்ப்பு கிடைக்கவில்லை. 

முதல் ஆட்டத்தில் கடைசி கட்ட பந்து வீச்சில் சொதப்பிய இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது ஷமி, முகமது சிராஜ், ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் கடந்த ஆட்டத்தில் மிரட்டலாக பந்து வீசினர். தொடரை வென்று விட்டதால் இந்திய அணியின் பந்து வீச்சு கூட்டணியில் மாற்றம் கொண்டுவரப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

team

நியூசிலாந்து அணி முதல் ஆட்டத்தில் 350 ரன் இலக்கை நெருங்கி வந்து (337 ரன்கள்) தான் கோட்டை விட்டது. ஆனால் கடந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த அந்த அணி 34.3 ஓவர்களில் 108 ரன்னில் சுருண்டது. அந்த அணியின் பேட்டிங்கில் மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னெர் மட்டுமே குறிப்பிடத்தக்க வகையில் ரன் சேர்க்கின்றனர். எனினும் ஆறுதல் வெற்றியை பெற நியூசிலாந்து அணி எல்லா வகையிலும் போராடும்.

அதேநேரத்தில் இந்த தொடரை முழுமையாக (3-0) வென்றால் ஒருநாள் போட்டி தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தை இந்தியா எட்ட முடியும் என்பதால் அந்த இலக்கை அடைய இந்திய வீரர்கள் முனைப்பு காட்டுவர். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. 

இந்தூர் ஆடுகளம் பேட்டிங்குக்கு அனுகூலமாக இருப்பதுடன், இங்கு பவுண்டரி தூரம் குறைவானதாகவும் இருப்பதால் இந்த ஆட்டத்தில் ரன் மழை பொழிய வாய்ப்புள்ளது. இந்த மைதானத்தில் 5 ஒருநாள் போட்டியில் விளையாடி இருக்கும் இந்திய அணி அனைத்திலும் வெற்றி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  

From around the web