ரொனால்டோவைத் தொடர்ந்து பில்லியனர் (ரூ.8,300 கோடி) பட்டியலில் இணைந்தார் மெஸ்ஸி!

 
கால்பந்து மெஸ்ஸி கால்பந்து மெஸ்ஸி

உலகக் கால்பந்து வரலாற்றில் பல வரலாற்றுச் சாதனைகளைப் படைத்த அர்ஜென்டினா அணியின் கேப்டனும், உலகக் கோப்பை நாயகனுமான லியோனல் மெஸ்ஸி, நிதி உலகிலும் ஒரு பிரம்மாண்ட மைல்கல்லை எட்டியுள்ளார். புகழ்பெற்ற ‘புளூம்பெர்க்’ அமைப்பின் சமீபத்திய நிதிப் பகுப்பாய்வு அறிக்கையின்படி, லியோனல் மெஸ்ஸியின் நிகர சொத்து மதிப்பு 1 பில்லியன் அமெரிக்க டாலர்களைக் (இந்திய மதிப்பில் சுமார் 8,300 கோடி ரூபாய்க்கும் மேல்) கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் விளையாட்டு உலகில் பில்லியனர் அந்தஸ்தைப் பெறும் மிக அரிதான விளையாட்டு வீரர்களின் பட்டியலில் மெஸ்ஸி அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார்.

சர்வதேச கால்பந்து அரங்கில் கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் லியோனல் மெஸ்ஸி ஆகிய இருவருக்கும் இடையே பல ஆண்டுகளாக மிகக் கடுமையான போட்டி நிலவி வருகிறது. தற்பொழுது இந்த வர்த்தகப் போட்டியிலும் மெஸ்ஸி பில்லியனர் கிளப்பில் இணைந்துள்ளார். தனது நீண்டகால விளையாட்டு எதிரியான போர்ச்சுகல் நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்குப் பிறகு, உலக அளவில் 1 பில்லியன் டாலர் சொத்து மதிப்பை எட்டிய இரண்டாவது கால்பந்து வீரர் என்ற பெருமையை மெஸ்ஸி பெற்றுள்ளார்.

லியோனல் மெஸ்ஸி

மெஸ்ஸியின் இந்த அசுர நிதி வளர்ச்சிக்கு அவரது அசாத்திய கால்பந்து திறமையும், புத்திசாலித்தனமான வணிக முதலீடுகளுமே முக்கியக் காரணமாகும். புளூம்பெர்க் அறிக்கையின்படி, அவர் தனது தொழில்முறை கால்பந்து வாழ்க்கையைத் தொடங்கிய 2007-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை, விளையாடுவதற்கான அதிகாரப்பூர்வ சம்பளம் மற்றும் வெற்றிப் போனஸாக மட்டுமே 700 மில்லியன் டாலருக்கும் (சுமார் 5,800 கோடி ரூபாய்) அதிகமாகச் சம்பாதித்து சாதனை படைத்துள்ளார். பார்சிலோனா, பிஎஸ்ஜி (PSG) மற்றும் தற்போதைய இன்டர் மியாமி ஆகிய கிளப்களில் அவர் பெற்ற அசாத்திய சம்பள ஒப்பந்தங்கள் இதற்கு அடித்தளமாக அமைந்தன.

கடந்த 2023-ஆம் ஆண்டு மெஸ்ஸி பிஎஸ்ஜி கிளப்பில் இருந்து வெளியேறிய போது, சவுதி அரேபியா கிளப் அவருக்கு ஆண்டுக்கு 400 மில்லியன் டாலர் என்ற பிரம்மாண்ட தொகையை வழங்க முன்வந்தது. ஆனால், மெஸ்ஸி பணத்தை விடத் தனது குடும்பத்தின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, அமெரிக்காவின் 'இன்டர் மியாமி' கிளப்பைத் தேர்ந்தெடுத்தார்.

கால்பந்து

மியாமி கிளப்புடனான அவரது ஒப்பந்தம் வெறும் சம்பளத்தோடு முடிந்துவிடவில்லை. மாறாக, ஆப்பிள் டிவி நிறுவனத்தின் எம்எல்எஸ் சீசன் பாஸ் ஒளிபரப்பு வருவாயில் குறிப்பிட்ட பங்கு, அடிடாஸ் நிறுவனத்துடனான வாழ்நாள் விளம்பர ஒப்பந்தம் மற்றும் இன்டர் மியாமி கிளப்பின் எதிர்காலப் பங்குகளைப் பெறும் உரிமை ஆகியவற்றைக் கொண்ட அதிரடி கார்ப்பரேட் வியூகமாக அமைந்தது. இதுவே அவர் மிக வேகமாக 1 பில்லியன் டாலர் சொத்து மதிப்பை எட்ட உதவியது.

கால்பந்து தவிர, மெஸ்ஸி ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் சொகுசு ஹோட்டல்கள் , ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், 'மாஸ்+'  என்ற விளையாட்டு ஊட்டச்சத்து பானம் மற்றும் தொழில்நுட்பத் துறைகளிலும் பெருமளவில் முதலீடு செய்துள்ளார். இதன் மூலம் மைக்கேல் ஜோர்டான், லெப்ரான் ஜேம்ஸ், டைகர் வுட்ஸ், ரோஜர் பெடரர் மற்றும் ரொனால்டோ போன்ற பில்லியனர் விளையாட்டு ஜாம்பவான்களின் பட்டியலில் தற்பொழுது லியோனல் மெஸ்ஸியும் கம்பீரமாக இடம்பிடித்துள்ளார்.