"ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை" - தவெக அரசை விமர்சித்த அதிமுக எம்.எல்.ஏ எஸ்.பி.வேலுமணி!

 
எஸ்.பி.வேலுமணி எஸ்.பி.வேலுமணி

கோவையில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. தவெக அரசின் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவை விமரிசித்து திமுக ஏற்கனவே போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில், பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவின் கொறடாவும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ அவர்களும் இந்த விவகாரத்தில் தவெக அரசை நோக்கி மிகக் கடுமையான விமரிசனங்களை முன்வைத்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த எஸ்.பி.வேலுமணி,  முதலமைச்சர் விஜய் அவர்களின் தலைமையிலான தவெக ஆட்சியை மிக ஆக்ரோஷமாகச் சாடினார். "தமிழகத்தில் ஆட்சி மாறினாலும், சட்டம்-ஒழுங்கு மற்றும் பெண்களுக்கான பாதுகாப்பு என்ற காட்சி இன்னும் மாறவே இல்லை என்பதற்கு கோவையில் பிஞ்சு சிறுமிக்கு நேர்ந்துள்ள இந்த கொடூர நிகழ்வே மிகச்சிறந்த சான்றாகும்" என்று அவர் குற்றம் சாட்டினார்.

“இபிஎஸ் விஜயபாஸ்கர் எஸ்.பி.வேலுமணி எடப்பாடி

மேலும், இவ்வழக்கில் காவல்துறையின் செயல்பாடுகள் குறித்துப் புதிய சந்தேகம் ஒன்றை எழுப்பிய அவர், "இச்சம்பவம் நடந்த சில மணி நேரங்களிலேயே கார்த்தி மற்றும் மோகன்ராஜ் ஆகிய இருவரைப் போலீசார் அவசர அவசரமாகக் கைது செய்துள்ளனர். ஆனால், இந்த வழக்கில் தவெக அரசு தங்களுக்கு ஏற்பட்டுள்ள நிர்வாகத் தோல்வி மற்றும் மக்கள் அவப்பெயரை மறைப்பதற்காக யாரையாவது பிடித்துக் காட்டியுள்ளதா? கைது செய்யப்பட்டுள்ளவர்கள் உண்மையான குற்றவாளிகள்தானா என்பதை அரசு உடனடியாக உறுதி செய்ய வேண்டும்" என அதிரடிச் சந்தேகம் எழுப்பியுள்ளார்.

விஜயபாஸ்கர் ரெய்டு வேலுமணி

கடந்த வாரம் வரை சட்டமன்றப் பணிகளின் போது தவெக அரசுக்கு ஆதரவாகப் பேசி வந்த எஸ்.பி.வேலுமணி,  தனது ஆதரவு நிலையை 180 டிகிரி முற்றிலுமாக மாற்றி, தவெக அரசை நேரடியாகத் தாக்கியிருப்பது அரசியல் அரங்கில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் அதிமுகவிலிருந்து முன்னாள் எம்பி வேணுகோபால் விலகிய பரபரப்பிற்கு மத்தியில், கோவையில் திமுக செய்தித் தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரையின் விமர்சனத்தை அடுத்து அதிமுகவும் தவெக அரசுக்கு எதிராகக் களம் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.