உஷார்... இந்தியாவிற்குள் நுழைபவர்கள் காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் 21 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தல்!

 
குரங்கு காய்ச்சல்

மறுபடியும் முதலில் இருந்தா என்கிற பதைபதைப்பு மக்களிடையே உருவாகி இருக்கிறது. கேரளத்தில் நிபா வைரஸ் பரவல் அதிகரித்து வருவது ஒரு புறம் கவலையளித்து வரும் நிலையில், குரங்கு அம்மை நோயும் அதிகரித்துள்ளது பதற்றத்தை உருவாக்கி இருக்கிறது. இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்குள் நுழைபவர்கள் தங்களுக்கு காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் தொடர்ந்து 21 நாட்களுக்கு தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என்று பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு துறை இயக்குநர் அறிவுறுத்தி உள்ளார். 

தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி, கன்னியாகுமரி மாவட்ட பொதுசுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு துறை சார்பில் கேரள எல்லையான களியக்காவிளை சோதனை சாவடியில் நிபா வைரஸ் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வதை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, மற்றும் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு துறை இயக்குநர் செல்வ வினாயகம் ஆகியோர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வுக்குப்பின் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு துறை இயக்குநர் செல்வ வினாயகம் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்- கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்திற்குற்பட்ட பகுதிகளில் குரங்கம்மை, நிபா வைரஸ் நோய் தொற்று பரவலின் எதிரொலியாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாடு எல்லையோர மாவட்டங்களான நீலகிரி (உதகை), கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் சுகாதாரத்துறையினால் எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை மற்றும் காக்கவிளை சோதனை சாவடிகளில் சுகாதாரத்துறையினரால் மருத்துவ சோதனைகள் செய்யப்பட்டு வருகிறது.

பறவைக் காய்ச்சல்

குரங்கம்மை, நிபா வைரஸ் இரண்டு நோய் குறித்து சோதனை சாவடிகளிலும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, காய்ச்சல் இருப்பின் அவர்களுக்கு உரிய பரிசோதனை செய்யப்பட்டு, நோய்த்தொற்று உள்ளதா என பரிசோதிக்கப்பட்டு வருகிறது.

நிபா வைரஸனாது பழந்தின்னி வௌவால்கள், பன்றிகள் மூலமாக பரவுகிறது. நிபா வைரஸ் அறிகுறிகள் காய்ச்சல், தலைவலி, இருமல், சளி, உடல் வலி உள்ளிட்டவைகளாகும். இதுபோன்ற அறிகுறிகள் தென்படின் உடனடியாக அருகாமையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு தலைமை மருத்துவமனைகளில் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். அனைத்து நோயாளிகளையும் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகள் மற்றும் மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு தினங்களில் கேரளாவிலிருந்து கன்னியாகுமரி மாவட்ட எல்லை பகுதியான களிக்காவிளை சோதனை சாவடி வழியாக 392 வாகனங்களில் வந்த 1043 பேருக்கு காய்ச்சல் அறிகுறி உள்ளதா என பரிசோதனை மேற்கொண்டதில் யாருக்கும் நிபா வைரஸ் தொற்று பரவவில்லை. மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவர்களுக்கு நிபா வைரஸ் குறித்த பயிற்சி வழங்கப்பட்டுள்ளதோடு, கால்நடைத்துறையினர் மூலம் பன்றிப்பண்ணைகளில் ஆய்வு மேற்கொள்ள இணை இயக்குநர் கால்நடைத்துறை உள்ளிட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அவர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே பொது மக்கள் நிபா வைரஸ் குறித்து பீதியடைய வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். ஆப்பிரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து குறிப்பாக பாதிப்புக்குள்ளாகிய நாடுகளிலிருந்து கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருபவர்கள் தங்களுக்கு காய்ச்சல் போன்ற நோய் தொற்று அறிகுறிகள் தென்படின் தொடர்ந்து 21 நாட்களுக்கு தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். 

மேலும் காய்ச்சல், சளி உள்ளிட்ட அறிகுறிகள் இருப்பின் பொதுமக்கள் உடனடியாக அருகாமையில் உள்ள ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் அரசு தலைமை மருத்துவமனைகளுக்கு சென்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டுமென கேட்டக்கொள்கிறேன். இவ்வாறு பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு துறை இயக்குநர் செல்வ வினாயகம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

குரங்கு காய்ச்சல்

முன்னதாக மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு துறை இயக்குநர் செல்வ வினாயகம் கேரளாவிலிருந்து வாகனங்களில் வரும் நபர்களை களியக்காவிளை சோதனை சாவடியில் மருத்துவ அலுவலர்கள் பரிசோதனை மேற்கொள்வதை பார்வையிட்டார்.

ஆய்வில் துணை இயக்குநர் (பொது சுகாதாரம்) மீனாட்சி, மாவட்ட கொள்ளை நோய்த்தடுப்பு அலுவலர் கிங்சால், வட்டார மருத்துவ அலுவலர் புரூஸ், களிக்காவிளை பேரூராட்சி தலைவர் சுரேஷ், மருத்துவர்கள், மருத்துவ அலுவலர்கள், காவல்துறையினர் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!

From around the web