பேட்மிண்டன் வீரர் கடத்திச் சித்ரவதை செய்து படுகொலை... காதலால் கொடூரம்!
ராஜஸ்தான் மாநிலம் பிவாடி பகுதிக்கு உட்பட்ட சைத்பூர் கிராமத்தைச் சேர்ந்த 21 வயது வாலிபர் மோனு. சிறந்த பேட்மிண்டன் வீரரான இவர், பள்ளி மற்றும் மாவட்ட அளவிலான பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு பல பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார். இவர் பரீதாபாத் நகரைச் சேர்ந்த சிறுமி ஒருவரைக் காதலித்து வந்த நிலையில், இவர்களது காதலுக்குப் பெண்ணின் குடும்பத்தினர் தரப்பில் மிகக் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி மோனு அந்தச் சிறுமியை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியதால், கடந்த ஏப்ரல் மாதம் சிறுமியின் தந்தை குல்பூஷண் காவல்துறையில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் சிறுமியை பத்திரமாக மீட்ட நிலையில், மோனு மட்டும் யாரிடமும் சிக்காமல் தலைமறைவாக இருந்துள்ளார். இந்தச் சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியே சென்ற மோனுவை மர்ம கும்பல் ஒன்று திடீரெனக் கடத்திச் சென்றுள்ளது.
அவரைத் தேடி வந்த குடும்பத்தினருக்குச் சிறுமியின் வீட்டின் முன்பாக மோனு படுகாயங்களுடன் உயிருக்குத் போராடிக் கொண்டிருப்பதாக அதிர்ச்சித் தகவல் கிடைத்தது. உடனே விரைந்து வந்த போலீசார் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மோனுவை மூன்று நாட்களாக ரகசிய இடத்தில் அடைத்து வைத்து, அடித்துச் சித்ரவதை செய்தே பெண்ணின் குடும்பத்தினர் இக்கொடூரப் படுகொலையை அரங்கேற்றியுள்ளனர் என்று மோனுவின் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
