பெங்களூரு பெண் கொலை வழக்கில் திருப்பம்... ஃப்ரிட்ஜுக்கு அருகே சூட்கேஸில் சதைத் துண்டுகள்! அதிர வைத்த முடிதிருத்தும் ஊழியர்!

 
மகாலட்சுமி
பெங்களூருவில் 29 வயதுடைய இளம்பெண் மகாலட்சுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான கூடுதல் விவரங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. 

முன்னதாக ஃப்ரிட்ஜுக்குள் 32 கூறுகளாக மகாலட்சுமியின் உடல் உறுப்புகள் துண்டு துண்டாக்கப்பட்டு அடுக்கி வைக்கப்பட்டிருந்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது ஃப்ரிட்ஜுக்கு அருகே நீல நிற சூட்கேஸிலும் சதைத் துண்டுகள் இருந்ததாகவும் 50க்கும் மேற்பட்ட துண்டுகளாக மகாலட்சுமியின் உடல் கூறுபோடப்பட்டிருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர். இந்த வழக்கில் முக்கிய சந்தேக நபரை அடையாளம் கண்டுள்ளதாகவும், ஆனால் அவரை இன்னும் கைது செய்யவில்லை என்றும் போலீசார் தெரிவித்திருந்தனர் . 


மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மகாலட்சுமியின் தோழி ஒருவரையும், முடிதிருத்தும் கடையில் ஊழியராக பணிபுரிந்து வந்த வடமாநில இளைஞர் ஒருவரையும் சந்தேகிப்பதாகவும், குற்றவாளியை நெருங்கி விட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். 

மல்லேஸ்வரத்தில் உள்ள மகாலட்சுமியின் வீட்டின் குளிர்சாதனப் பெட்டியில், 50க்கும் மேற்பட்ட உடற்பாகங்களின் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டதையும் போலீசார் வெளிப்படுத்தினர்.

செய்தியாளர் கூட்டத்தில் பேசிய பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் பி தயானந்தா, "இந்த வழக்கு அனைத்து கோணங்களிலும் விசாரிக்கப்பட்டு வருகிறது. பிரதான சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டு அவரை கைது செய்வதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. அவர் வேறு மாநிலத்தை சேர்ந்தவர். ஆனால் பெங்களூரில் தங்கியுள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு உதவக் கூடும் என்பதால், எங்களால் கூடுதல் தகவல்களைத் தெரிவிக்க முடியாது” என்று கூறியிருந்தார்.

குளிர்சாதனப்பெட்டிக்கு அருகில் ஒரு நீல நிற சூட்கேஸைக் கண்டுபிடித்ததாகவும், அதில் பெண்ணின் சடலம் துண்டு துண்டாகக் காணப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

சூட்கேஸ் மீட்கப்பட்டதையடுத்து, கொலையாளி உடலை அந்த இடத்தை விட்டு நகர்த்த விரும்பினாரா அல்லது வேறு இடத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டதா என போலீசார் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையில், பெண்ணின் பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டு அதன் அறிக்கைக்காக காத்திருக்கிறது.

செப்டம்பர் 21 அன்று, பெங்களூரு மல்லேஸ்வரத்தில் உள்ள ஒரு வீட்டின் சுற்றுப்புறத்தில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக உள்ளூர்வாசிகள் புகார் தெரிவித்தனர். பின்னர், வீட்டில் உள்ள குளிர்சாதனப் பெட்டியில் இருந்து உடல் துண்டாக்கப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது. ஒரு போலீசார் குழு, மோப்பநாய் படை மற்றும் தடயவியல் நிபுணர்கள் வீட்டிற்குச் சென்று பார்வையிட்டதில், பெண் சடலம் கண்டெடுக்கப்படுவதற்கு கிட்டத்தட்ட ஐந்து நாட்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது.

மகாலட்சுமி

விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இந்த வழக்கை விசாரிக்க 6 குழுக்களை அமைத்துள்ளதாக பெங்களூரு காவல்துறை தெரிவித்துள்ளது. 

புதிய விவரங்களின்படி, மகாலட்சுமியின் குடும்பம் நேபாளத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால் 35 ஆண்டுகளுக்கு முன்பு கர்நாடகாவின் நெலமங்கலாவுக்கு வந்து தங்கியிருந்துள்ளனர். மகாலட்சுமி பெங்களூரில் பிறந்து வளர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது. தனது கணவரைப் பிரிந்து, ஒற்றை படுக்கையறைக் கொண்ட வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த அவரது கணவர் ஹேமந்த் சம்பவ இடத்திற்கு வந்திருந்தார். மகாலட்சுமி மல்லேஸ்வரத்தில் வசித்து வந்தபடியே வணிக வளாகம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். முடிதிருத்தும் ஊழியர் ஒருவருடன் மகாலட்சுமிக்கு தகாத உறவு இருந்து வந்துள்ளதாகவும், அவர் மீது சந்தேகப்படுவதாகவும், அவர் மீது மகாலட்சுமி சில மாதங்களுக்கு முன்பு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்ததாகவும் மகாலட்சுமியின் கணவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!

From around the web