உஷார்... வாட்ஸ் அப் மூலம் முதியவரின் ரூ.44 லட்சம் சேமிப்பு பணம் மோசடி!
வாட்ஸ்அப் மூலம் ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ என மிரட்டி, 83 வயது முதியவரின் சேமிப்பு பணம் ரூ.44 லட்சத்தை அபகரித்த வழக்கில் வங்கியின் துணை மேலாளர் உள்பட 2 பேர் மத்திய குற்றப்பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.
விருகம்பாக்கத்தைச் சேர்ந்த பட்டாபி (83) கடந்த செப்டம்பர் 1-ம் தேதி வாட்ஸ்அப்பில் ஒரு அழைப்பை பெற்றார். ‘நான் மும்பை குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சங்கர் பேசுகிறேன். நீங்கள் சட்டவிரோத நிதி பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளீர்கள். உடனே கைது செய்ய போதிய ஆதாரம் உள்ளது’ என்று கூறி, மோசடி கும்பல் பயமுறுத்தியது.

பாதுகாப்புக்காக பணத்தை ரிசர்வ் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும் என கூறி, பட்டாபி வைத்திருந்த மொத்த சேமிப்பு ரூ.44 லட்சத்தையும் ஏமாற்றினர்.
சில நாள்கள் கழித்து மீண்டும் அழைத்து மேலும் பணம் கேட்டதால் சந்தேகமடைந்த பட்டாபி, சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்தார். இதன்பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். வங்கிப் பரிவர்த்தனைகளைத் துரத்திச் சென்ற போது, பணம் ராணிப்பேட்டை லட்சுமணன் (38), சிவக்குமார் (41) உள்ளிட்ட பலரின் கணக்குகளுக்கு பகிர்ந்து செலுத்தப்பட்டிருப்பது தெரியவந்தது. இருவரும் அக்டோபர் 10-ம் தேதி கைது செய்யப்பட்டனர்.

மேலும் விசாரணையில், மோசடிப் பணத்தைப் பெற பல வங்கிக் கணக்குகளைத் திறக்க உதவிய அண்ணா சாலையில் உள்ள தனியார் வங்கியின் துணை மேலாளர் ராமச்சந்திர மூர்த்தி (30), மற்றும் மோசடிப் பணத்தை மாற்றித் தந்த முகவராக செயல்பட்ட முகமது முஸ்பிக் (20) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
