பைக் - கார் மோதி விபத்து... ஊராட்சி மன்றத் தலைவர் உயிரிழப்பு!

 
விபத்து
 


தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அருகே அதிவேகத்தில் சென்றுக் கொண்டிருந்த காரும், பைக்கும் நேருக்கு நேர் மோதிக்கொண்டு விபத்திற்குள்ளானதில் எல்லப்புடையாம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தர்மபுரி மாவட்டம் அரூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட எல்லப்புடையாம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவராக பதவி வகித்து வந்தவர் கே.ஆர். மாரியப்பன் (59). இவர் நேற்று தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பணி நிமித்தமாக சென்று விட்டு, அதன் பின்னர் தனது இருசக்கர வாகனத்தில் பகல் 1.30 மணியளவில் அரூர் திரும்பி சென்றுக் கொண்டிருந்தார். அப்போது கடத்தூர் அருகேயுள்ள ஒடசல்பட்டி கூட்டுரோடு பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, எதிரே வந்த கார், இவரது பைக்கின் மீது பயங்கர வேகத்தில் மோதியதில் வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டார்.

இதில், பலத்த காயமடைந்த அவரை அங்குள்ளவர்கள் மீட்டு, சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட நிலையில் பிற்பகல் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். 

இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

From around the web