நடுரோட்டில் கவிழ்ந்து தீப்பிடித்த பேருந்து; 21 பேர் உடல் கருகி பலி... ஈராக்கில் பெரும் சோகம்!
மத்திய கிழக்கு நாடான ஈராக்கில் ஆன்மிக சுற்றுலா முடிந்து திரும்பிய பக்தர்களின் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து தீப்பற்றி எரிந்ததில், 21 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 20 பேர் படுகாயமடைந்து உயிருக்கு போராடி வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈராக் நாட்டின் பசுரா மாகாணத்தைச் சேர்ந்த 41 பேர், அந்நாட்டின் புனித நகரமான நஜப் நகரில் உள்ள புகழ்பெற்ற இஸ்லாமிய வழிபாட்டுத் தலத்திற்கு ஆன்மிக சுற்றுலா சென்றுள்ளனர். அங்கு தங்களது வழிபாடுகளை வெற்றிகரமாக முடித்துவிட்டு, அதே பேருந்தில் மீண்டும் தங்களது சொந்த ஊரான பசுரா நகருக்குப் புறப்பட்டுள்ளனர். பேருந்து தய் கியுர் மாகாணத்தில் உள்ள நசிர்ஹாய் நகரின் முக்கிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது.
நெடுஞ்சாலையில் அதிவேகமாகச் சென்றுகொண்டிருந்த பேருந்து, நேற்று மதியம் எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தலைகீழாகக் கவிழ்ந்தது. கவிழ்ந்த அடுத்த சில நொடிகளிலேயே பேருந்தின் எரிபொருள் டேங்க் வெடித்ததால், பேருந்து முழுவதும் மளமளவென அசுர வேகத்தில் தீப்பற்றி எரியத் தொடங்கியது. பேருந்திற்குள் இருந்த பயணிகள் வெளியேற முடியாமல் அலறியடித்த நிலையில், இந்த கொடூர விபத்தில் 21 பேர் தீயின் கோரப் பிடியில் சிக்கி உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பேருந்தில் பற்றிய தீயை அணைத்தனர். மேலும், இந்த விபத்தில் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 20 பேரை மீட்டு, சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அண்மையில் மேற்குவங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் தமிழகத்தில் நிகழ்ந்த சாலை விபத்துகளின் தொடர்ச்சியாக, சர்வதேச அளவிலும் இத்தகைய கொடூர விபத்து நேரிட்டு 21 உயிர்கள் பறிபோயிருப்பது ஒட்டுமொத்த உலகையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த விபத்துக்கான சரியான காரணம் குறித்து ஈராக் நாட்டு போலீசார் தற்பொழுது வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
