பள்ளிகளுக்கு ரூ.80 கோடி நன்கொடை வசூலிக்க கல்வித் துறை அதிகாரிகளை கட்டாயப்படுத்துவதா? – அன்புமணி கேள்வி!
அரசு பள்ளிகளுக்கான நன்கொடை வசூல் நடவடிக்கையில் கல்வி அதிகாரிகளையும் ஆசிரியர்களையும் ஈடுபடுத்தியதாக வெளியாகிய தகவல்களைத் தொடர்ந்து, பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக ‘நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி’ என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக நவம்பர் 3ஆம் தேதிக்குள் ரூ.80 கோடி நன்கொடை வசூலித்துத் தரும்படி ஆசிரியர்களும் பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளும் கட்டாயப்படுத்தப்படுவதாக வெளியான செய்திகள் கவலையளிக்கின்றன.

அரசின் தோல்விக்காக புனிதப் பணி செய்யும் ஆசிரியர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளை கையேந்த வைப்பது கண்டிக்கத்தக்கது. ஒரு மாநிலத்தின் கல்வித்துறை செழிக்க வேண்டுமெனில், மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 6% கல்விக்காக ஒதுக்கப்பட வேண்டும். ஆனால் தமிழக அரசு வெறும் 1.31% — ரூ.46,767 கோடி மட்டுமே ஒதுக்கி உள்ளது. இதனால் கல்விக்கான நிதி ஒதுக்கீட்டில் தமிழ்நாடு 22வது இடத்தில் தள்ளாடுகிறது.
இந்த நிதியால் பள்ளிகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த முடியாது என்பது உண்மைதான். எனினும், அதற்குத் தேவையான நிதியை அரசே கண்ணியமான வழியில் திரட்ட வேண்டும். அதற்குப் பதிலாக அரசு பள்ளிகளை தனியார் நிறுவனங்களிடம் தத்தளிக்க வைப்பதும், ஆசிரியர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளிடம் நன்கொடை கேட்க வைப்பதும் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.

அரசு உடனடியாக இந்த போக்கை கைவிட்டு, கல்விக்கான ஒதுக்கீட்டை அதிகரித்து, அரசு பள்ளிகளின் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும்,” என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
