இயக்குனர் வி. சேகர் கவலைக்கிடம்... மருத்துவமனையில் அனுமதி... பிரார்த்தனை செய்யுமாறு மகன் கோரிக்கை!
தமிழ் திரைப்பட பழம்பெரும் இயக்குனரும், நடிகருமான வி. சேகர், இதயத்தில் அடைப்பு ஏற்பட்டதால் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், அவரது உடல்நிலை அபாயக்கட்டத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அவர் விரைவில் நலம்பெற பிரார்த்தனை செய்யுமாறு அவரது மகன் கோரிக்கை வைத்துள்ளார்.
“பொண்டாட்டி சொன்னா கேட்கணும்”, “விரலுக்கேத்த வீக்கம்”, “வரவு எட்டனா செலவு பத்தனா” உள்ளிட்ட குடும்ப நகைச்சுவை திரைப்படங்களை இயக்கி மக்களின் மனதில் இடம்பிடித்தவர் வி. சேகர். வடிவேலு, விவேக் போன்ற நகைச்சுவை நடிகர்களை இணைத்து குடும்ப உணர்வையும் சிரிப்பையும் ஒரே திரையில் கலந்தவர் என்ற பெயரையும் பெற்றவர்.

சமீபத்தில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்ட அவருக்கு நான்கு நாட்களுக்கு முன்பு இதயத்தில் அடைப்பு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவரை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், வி. சேகரின் மகன் கார்ல் மார்க்ஸ் சேகர் சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,“தமிழ் மக்களே, என் தந்தையும் மக்கள் இயக்குனருமான வி. சேகர் தற்போது தன் உயிருக்காக போராடி வருகிறார். அவர் விரைவில் நலம் பெற அனைவரும் இறைவனை வேண்டிக் கொள்ளுங்கள்” என்று கேட்டுக் கொண்டுள்ளார். வி. சேகரின் உடல்நிலை குறித்து திரையுலகத்தினர் கவலை தெரிவித்துள்ளதுடன், அவர் விரைவில் குணமடைய பிரார்த்தனைகள் நடைபெற்று வருகின்றன.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
