பகீர்.. பறிமுதல் செய்யப்பட்ட தனியார் பேருந்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள்!
வேலூர் மாவட்டம், குடியாத்தம் ஆதிபராசக்தி கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் இருமுடி அணிந்து தனியார் பஸ்கள் மற்றும் மினி வேன்களில் செல்கின்றனர். இந்நிலையில், ஆம்பூர் வாணியம்பாடி அணைக்கட்டு பகுதியில் இருசக்கர வாகன பதிவு எண்ணுடன் தனியார் பேருந்து இயக்கப்படுவதாக வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதன்பேரில், குடியாத்தம் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் ராஜேஷ் கண்ணன் நேற்று முன்தினம் இரவு பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது, மோட்டார் வாகன ஆய்வாளர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்ததைக் கண்டு, இருசக்கர வாகன பதிவு எண் கொண்ட பேருந்து மாற்றுப் பாதையில் செல்ல முயன்றது.
இதையறிந்த மோட்டார் வாகன ஆய்வாளர் மற்றும் ஊழியர்கள் வாகனத்தை பிடித்து மேல்மருவத்தூர் கோயிலுக்கு சென்று கொண்டிருந்த பக்தர்களை அந்த பஸ்சில் இருந்து இறக்கி அரசு பஸ்சில் ஏற்றி குடியாத்தம் மோட்டார் வாகன அலுவலகத்துக்கு வாகனத்தை கொண்டு வந்தனர். பின்னர், இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணைக் கொண்டு பேருந்தை இயக்கியதற்காக அபராதம் விதித்து, அபராதத் தொகையை ஆன்லைனில் செலுத்துமாறு கூறினர். இந்நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட பேருந்தை மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் நிறுத்தியிருந்தபோது, அதிகாலை 2 மணியளவில் மர்ம நபர் ஒருவர் திருடிச் சென்றார்.
மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கன்னா புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் குடியாத்தம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.இதுகுறித்து, தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் கூறுகையில், ""பொதுமக்கள் தாங்கள் வீட்டு விசேஷங்கள் மற்றும் கோவில்களுக்கு முன்பதிவு செய்யும் பஸ்கள் மற்றும் மினி பஸ்களை ஆப் மூலம் சரிபார்த்து, வாகனங்களை முன்பதிவு செய்ய வேண்டும்’’ என்றார்.மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகன பதிவெண் கொண்ட பேருந்து திருடப்பட்ட சம்பவம் குடியாத்தம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!