உருக்காலையில் இரும்பு குழம்பு கொட்டி 12 தொழிலாளர்கள் உடல் கருகி பரிதாப பலி!
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் மத்திய அரசுக்குச் சொந்தமான பொதுத்துறை இரும்பு உருக்கு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் தினசரி நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் ஷிப்ட் முறையில் தீவிரப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாலை உருக்காலையில் உள்ள இரும்பை உருக்கும் பட்டறை பிரிவில் தொழிலாளர்கள் வழக்கம்போல் தங்களது பணிகளைச் செய்து கொண்டிருந்தனர்.

அப்போது அங்குள்ள கனரக கிரேனின் உதவியுடன், சுமார் 1600 டிகிரி வெப்பத்தில் உருகிய இரும்பு குழம்பைக் கொண்ட கொள்கலனைத் தூக்கிச் சென்ற போது திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால் நிலைதடுமாறிய கொள்கலனில் இருந்து கொதிக்கும் இரும்பு குழம்பு, கீழே வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது திடீரெனக் கொட்டி அப்பகுதி முழுவதும் தீப்பிடித்தது.

இந்த கோர விபத்தில் இரும்பு குழம்பு உடல் மீது கொட்டியதால் தொழிலாளர்கள் தப்பி ஓட முடியாமல், சம்பவ இடத்திலேயே 12 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த மீட்புக் குழுவினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள், படுகாயமடைந்த மற்ற தொழிலாளர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
