குன்னூரில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்.. 30க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்து சேதம்.. கதறும் மக்கள்!
நீலகிரி மாவட்டம் குன்னூரில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இரவில் மட்டும் கனமழை பெய்து வருவதால் மக்கள் தூக்கத்தை இழந்து தவித்து வருகின்றனர். நேற்று காலை முதல் மாலை 6 மணி வரை கனமழை பெய்யவில்லை. லேசான மழை மட்டுமே பெய்தது. தொடர்ந்து இரவு 8 மணியளவில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. குறிப்பாக குன்னூரில் மட்டும் 11 செ.மீ. பலத்த மழை பெய்தது. இதனால் குன்னூரில் பெரும்பாலான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. மேலும், வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதாலும், குளிர்ந்த காற்று தொடர்ந்து வீசி வருவதாலும் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர்.
இந்நிலையில், நேற்று இரவு 10 மணி முதல் இன்று காலை வரை குன்னூர் நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 25க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்தடை ஏற்பட்டு அப்பகுதி முழுவதும் இருளில் மூழ்கியது. குன்னூர் அருகே சின்னலக்கோம்பை, குரங்குமேடு பகுதிகளில் கனமழையால் வீடுகள் சேதமடைந்தன. மேலும் மழைநீர் வீட்டிற்குள் புகுந்ததால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டனர். இதேபோல் மேல் பாரதிநகர், கேரடலீஸ், மகாலிங்க காலனி, காந்திபுரம், சித்தி விநாயகர் கோயில் தெரு உள்ளிட்ட பல இடங்களில் 30க்கும் மேற்பட்ட வீடுகள் முழுமையாகவோ, பகுதியாகவோ இடிந்து சேதமடைந்துள்ளன.
மேலும் பெரும்பாலான பகுதிகளில் தடுப்பு சுவர் இடிந்து, அங்குள்ள குடியிருப்புகள் பள்ளத்தில் தொங்குகின்றன. குடியிருப்பாளர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டனர். குன்னூர் பெட்போர்ட் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பை ஒட்டியுள்ள ராட்சத தடுப்புச்சுவர் திடீரென இடிந்து விழுந்ததால் அங்குள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சாலையோரங்களில் மண் சரிவு மற்றும் வேரோடு சாய்ந்ததால் ஏற்பட்ட சேதங்களை வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் போலீசார் அகற்றி வருகின்றனர். மேலும் மழையால் பாதிக்கப்பட்ட குன்னூர் சித்தி விநாயகர் கோயில் தெருவை சேர்ந்த குழந்தைகள் உள்பட 9 பேர் வெஸ்லி தேவாலயத்தில் தங்கியுள்ளனர்.
குன்னூர் மேல்பாரதி நகர் பகுதியில் பாதிக்கப்பட்ட 8 பேர் அங்குள்ள சமுதாய கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கனமழையால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாகவும், குன்னூர் தாலுகாவில் பொதுமக்களுக்காக 150 தற்காலிக நிவாரண முகாம்கள் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் தாசில்தார் கனிசுந்தரம் தெரிவித்தார். குன்னூர் பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக வாகனங்களை இயக்குமாறு போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 24 மணி நேரத்தில் பெய்த மழையின் விவரம் வருமாறு (மில்லிமீட்டரில்):- கெத்தி-21 மி.மீ., பரலியார்-30 மி.மீ., குன்னூர் கிராமம்-145 மி.மீ., எடப்பள்ளி-55 மி.மீ., பில்லிமலை- 1.2 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!