நீலகிரியில் உறைபனி... வெள்ளை வெளேரென கம்பளம் விரித்தாற் போல் மாறிய மைதானங்கள்!

 
நீலகிரி
 சிம்லா, ஜம்மு காஷ்மீர் எல்லாம் பனியாக காட்சியளிக்கிறது என்று கடந்த இரு தினங்களாக சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் பரவி வரும் நிலையில், நீலகிரியில் உறைபனி அதிகரித்து வருவதால் 1 டிகிரிக்கு குறைந்ததில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. 

நீலகிரியில் மைதானங்கள் வெள்ளைக் கம்பளம் விரித்தாற்போன்று காட்சியளிக்கிறது. பொதுவாகவே பிப்ரவரி மாதம் இறுதி வரையில் நீலகிரியில் உறைபனி விழும் என்றாலும் இந்த வருடம் அதிகளவு பனிப்பொழிவு உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர். கடுங்குளிரால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

நீலகிரி

நீலகிரியில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் தொடங்கி 2 மாதங்கள் நீர்ப்பனி விழும். நவம்பர் மாதம் இறுதியில் தொடங்கி பிப்ரவரி மாதம் இறுதி வரையில் உறைபனி விழும். ஆனால் இந்த வருடம் மிதமான மழை பெய்து வந்ததால் பனியின் தாக்கம் குறைந்ததுடன், நீர்பனி விழுவதும் தாமதமாகி வந்தது.

இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக நீலகிரியில் நீர்பனி கொட்ட தொடங்கி உள்ளது. கடந்த 2 நாட்களாக ஊட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உறைபனி கொட்டியது. அரசு தாவரவியல் பூங்கா, ரேஸ்கோர்ஸ், தலைகுந்தா, பைக்காரா, கிளன் மார்கன், உள்ளிட்ட பகுதிகளில் உறைபனி கொட்டியதால் அந்த பகுதியில் உள்ள மைதானங்கள் அனைத்தும் வெள்ளை வெளேரென்று கம்பளம் விரித்தாற்போல் காட்சியளித்தது.

நீலகிரி

செடி, கொடிகள், இரு சக்கர வாகனங்கள், கார்கள் என அனைத்து வாகனங்களிலும் பனி படர்ந்து பனிமலை போன்று காணப்பட்டது. உறைபனி கொட்டும் அதே வேளையில் கடுங்குளிரும் நிலவி வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. 

பைக்காரா, கிளன்மார்கன், தொட்ட பெட்டா போன்ற பகுதிகளில் குளிரின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. ஊட்டியில் நகர பகுதியில் அதிகபட்சமாக 17 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 3.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி இருந்தது. புறநகர் பகுதிகளில் 1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி இருந்தது. சூரியன் உச்சிக்கு வரும் வேளையில் தான் வீட்டை விட்டே வெளியே வர முடிவதாக பலரும் கூறி வருகின்றனர்.

From around the web