திமுக ஆட்சியாளர்களை மக்கள் வீட்டுக்கு அனுப்பப் போவது உறுதி” – விஜய் கடும் விமர்சனம்!
தொடர்ந்து பெய்து வரும் மழையால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், திமுக அரசின் செயல்பாடுகள் குறித்து தவெக தலைவர் விஜய் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தொடர் மழையால் நெல் மூட்டைகள் முளைத்ததைப் போல, திமுக ஆட்சிக்கு எதிரான மக்களின் எதிர்ப்பு முளைத்து வளர்ந்து வருகிறது. இந்த எதிர்ப்பு ஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்பும் வரை தொடரும் என்பதில் ஐயமில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், “மழை காரணமாக நெல்மணிகள் நனைந்து வீணாகும் நிலை ஏற்பட்டுள்ள நிலையில், தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து மீதமுள்ள நெல் பொருட்களை பாதுகாத்திருக்க வேண்டியது அவசியம். ஆனால் அரசு அலட்சியமாக நடந்துகொண்டது. இது விவசாயிகளின் கடின உழைப்பை வீணாக்கியதுடன், ஏழை விவசாயிகளின் வயிற்றில் அடித்தது போன்றது,” எனக் கூறினார்.
விஜய் மேலும் கேள்வி எழுப்பியுள்ளார்: “விவசாயிகள் உழைத்து விளைவித்த நெல் உள்ளிட்ட தானியங்கள் மழையில் நனைந்து அழிந்துவிடும் நிலை ஒவ்வொரு ஆண்டும் நிகழ்கிறது. இதைத் தடுக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காதது ஏன்? பருவமழையால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படாமல் இருக்க வடிகால் வசதி போதுமானதாக ஏற்படுத்தப்பட்டுள்ளதா? நனைந்த தானியங்களை காப்பாற்ற சேமிப்பு வசதிகள் போதுமானவையா?” என்றார்.

அவர் தொடர்ந்தும், “டெல்டா விவசாயிகள் கடுமையாக உழைத்து விளைவித்த நெல் அரசின் அலட்சியத்தால் மழையில் வீணாகிவிட்டது. அதேபோல மக்களின் மனங்களிலும் திமுக அரசுக்கு எதிரான கோபம் விதையாக முளைத்து வருகிறது. அது விரைவில் பலம் பெற்று, இந்த மக்களுக்கெதிரான திமுக ஆட்சியை வீழ்த்தும் என்பதில் சந்தேகமில்லை,” எனவும் குறிப்பிட்டார்.
வடகிழக்கு பருவமழை தொடரும் நிலையில், ஏழை விவசாயிகளின் நலனைப் பாதுகாக்க அரசாங்கம் உண்மையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், விளம்பர நடவடிக்கைகளில் மூழ்காமல் போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும் என்றும் விஜய் வலியுறுத்தினார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
