அரசு பொதுக்கழிவறையில் வீசப்பட்ட பச்சிளங்குழந்தை... சொந்த வாகனத்தில் ஏற்றி உயிரைக் காப்பாற்றிய காவல் ஆய்வாளர்!

 
குழந்தை குழந்தை

பெற்ற தாயே பச்சிளங்குழந்தையைக் குப்பைத் தொட்டியிலோ அல்லது ஆள் நடமாட்டமில்லாத பகுதிகளிலோ வீசிச் செல்லும் கொடூரங்கள் ஆங்காங்கே அரங்கேறி வரும் நிலையில், சென்னையில் அதுபோன்றதொரு அவலத்திற்கு மத்தியில் காவல்துறையினரின் மனிதாபிமானம் மற்றும் துரித செயல்பாட்டினால் ஒரு பிஞ்சு உயிர் பத்திரமாகக் காப்பாற்றப்பட்டுள்ளது. சென்னை சோழிங்கநல்லூர் பகுதியில் பிறந்து ஒரே ஒரு நாளே ஆன பச்சிளங்குழந்தை ஒன்று அரசு கழிவறையில் வீசப்பட்டுக் கிடந்த நிலையில், அதனைத் தமிழகக் காவல்துறையினர் சினிமா பாணியில் மீட்டுள்ளனர்.

சென்னை சோழிங்கநல்லூர் நீதிமன்ற வளாகத்தின் அருகே பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அமைந்துள்ள அரசு பொதுக் கழிவறைப் பகுதிக்கு  சென்ற பொதுமக்கள் சிலர், அங்கிருந்து ஒரு பச்சிளங்குழந்தையின் பலத்த அழுகுரல் சத்தம் கேட்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அங்குச் சென்று பார்த்தபோது, தொப்புள்கொடி கூட முழுமையாக உலராத நிலையில், பிறந்து சில மணி நேரங்களே ஆன ஒரு ஆண் குழந்தை எவ்வித துணியுமின்றி அங்கு வீசப்பட்டுக் கிடந்தது தெரியவந்தது.

குழந்தை வாயில் டேப்

இது குறித்துப் பொதுமக்கள் உடனடியாகச் செம்மஞ்சேரி காவல் நிலையத்திற்கு அவசரத் தகவல் கொடுத்தனர். தகவலறிந்த அடுத்த சில நிமிடங்களிலேயே செம்மஞ்சேரி காவல் ஆய்வாளர்  ராஜசேகர் அவர்கள் தனது தனிப்படையினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். ஆம்புலன்ஸ் வாகனம் வரக் காலதாமதமாகும் என்பதை உணர்ந்த ஆய்வாளர் ராஜசேகர், எவ்வித தயக்கமும் இன்றி குழந்தையைத் தனது கைகளில் ஏந்தி, உடனடியாகத் தனது சொந்த ரோந்து வாகனத்திலேயே ஏற்றிச் சென்றார்.

அங்கிருந்து அசுர வேகத்தில் வாகனத்தை இயக்கி, சோழிங்கநல்லூர் பகுதியில் உள்ள அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்திற்குச் சென்று குழந்தையை முதலுதவி சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்குப் பரிசோதித்த மருத்துவர்கள், "சரியான நேரத்தில் குழந்தை மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டதால், அதன் உயிர் தப்பியுள்ளது; தற்பொழுது குழந்தையின் உடல்நிலை மிகவும் சீராக உள்ளது" எனத் தெரிவித்தனர்.

குழந்தை உயிரிழப்பு

இதனைத் தொடர்ந்து, இக்கொடூரச் செயலில் ஈடுபட்ட குழந்தையின் பெற்றோர் யார்? எதற்காகக் குழந்தையைக் கழிவறையில் வீசிச் சென்றனர்? என்ற கோணத்தில் செம்மஞ்சேரி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். நீதிமன்றம் மற்றும் கழிவறைச் சுற்றியுள்ள பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளைத் தீவிரமாக ஆய்வு செய்து, குழந்தையைக் கைவிட்டுச் சென்ற மர்ம நபர்களைப் போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.