ஐபிஎல் லேசர் ஷோவில் தவறான இந்திய வரைபடம்... கொந்தளிக்கும் ரசிகர்கள்!
தரம்சாலா மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் பரபரப்பான முதலாவது தகுதிச் சுற்று (குவாலிபையர் 1) ஆட்டத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி, கேப்டன் ரஜத் படிதாரின் அசாத்திய அதிரடி ஆட்டத்தால் 20 ஓவர்களில் 254 ரன்கள் குவித்து வலுவான இலக்கை நிர்ணயித்தது. ஆனால், இந்த ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸ் முடிவில் மைதானத்தில் ரசிகர்களுக்காக நடத்தப்பட்ட லேசர் விளக்குக் காட்சியில் (Laser Show) இந்தியாவின் வரைபடம் தவறாகக் காட்டப்பட்டது தற்பொழுது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இன்னிங்ஸ் இடைவெளியில் சுமார் 25 நிமிடங்கள் நீடித்த இந்த லேசர் ஷோவின் போது, ஐபிஎல் கோப்பையின் மீது லேசர் விளக்குகளால் இந்தியாவின் வரைபடம் பிரதிபலிக்கப்பட்டது. ஆனால், அந்த வரைபடத்தில் ஜம்மு-காஷ்மீர், உத்தரப் பிரதேசம், பீகார் மற்றும் வடகிழக்கு இந்திய மாநிலங்களின் பெரும்பாலான முக்கியப் பகுதிகள் முற்றிலும் விடுபட்டு அரைகுறையாகக் காட்சியளித்தது. இதை மைதானத்திலும், தொலைக்காட்சிகளிலும் நேரலையாகப் பார்த்த கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் விளையாட்டுப் பிரியர்கள் அனைவரும் கடும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

இந்தியாவின் இறையாண்மையை அவமதிக்கும் வகையில் அமைந்த இந்த அரைகுறை வரைபடத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள், அடுத்த சில நிமிடங்களிலேயே சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வைரலாகின. இதனால் ஆத்திரமடைந்த நெட்டிசன்கள் பலரும், இத்தகைய மாபெரும் தவறுக்குக் காரணமான இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) மற்றும் தரம்சாலா மைதான நிர்வாகத்திற்கு எதிராகத் தங்களின் பலத்த கண்டனங்களை அலை அலையாகப் பதிவு செய்து வருகின்றனர். தேசத்தின் வரைபடத்தையே தவறாகச் சித்தரித்த இந்த அலட்சியப் போக்குக்குத் தொடர்புடைய அதிகாரிகள் உடனடியாகப் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
