ஜெய்ஸ்வாலின் முதல் அபார சதம்... தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி, தொடரை கைப்பற்றியது இந்தியா!
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடிய தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரை, விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெற்ற கடைசிப் போட்டியில் இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்று 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்த நிலையில், தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் கடைசிப் போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கே.எல். ராகுல் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி, டி காக் அடித்த 106 ரன்கள் உதவியுடன் 47.5 ஓவர்களில் 270 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இந்தியத் தரப்பில் குல்தீப் யாதவ் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதையடுத்து 271 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா - ஜெய்ஸ்வால் இணை தென் ஆப்பிரிக்கப் பந்துவீச்சைச் சிறப்பாக எதிர்கொண்டு வலுவான அடித்தளம் அமைத்தது. இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். முதல் விக்கெட்டுக்கு 155 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், ரோகித் சர்மா 75 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து ஜெய்ஸ்வாலுடன் இணைந்த விராட் கோலி ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடி, மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்டார். அபாரமாக ஆடிய ஜெய்ஸ்வால் ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதலாவது சதத்தைப் பதிவு செய்து அசத்தினார். விராட் கோலியும் அரைசதத்தைப் பூர்த்தி செய்தார். வெறும் 39.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்த இந்திய அணி 271 ரன்கள் அடித்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஜெய்ஸ்வால் 116 ரன்களுடனும், விராட் கோலி 65 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
