கச்சத்தீவு அந்தோணியார் திருவிழா மார்ச் 14, 15ம் தேதிகளில் நடக்கிறது!

இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடைப்பட்ட நடுக்கடல் பகுதியில் அமைந்துள்ள கச்சத்தீவு பகுதியில் புனித அந்தோணியார் ஆலய திருவிழா வருகிற மார்ச் மாதம் 14, 15ம் தேதிகளில் நடைபெற உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியில் இருந்து 12 கடல் மைல் தொலைவிலும், இலங்கை நெடுந்தீவு பகுதியில் இருந்து 18 கடல் மைல் தொலைவிலும் அமைந்துள்ள தீவு கச்சத்தீவு. இந்த கச்சத்தீவில் அமைந்துள்ள புனித அந்தோணியார் ஆலயத்தின் திருவிழா ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதங்களில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இலங்கையில் யாழ்ப்பாணம் மறை மாவட்ட பிஷப் ஜோசப்தாஸ் ஜெபரத்தினம் இ-மெயில் மூலம் சிவகங்கை மதுரை மாவட்ட பிஷப் லூர்து ஆனந்தம் மற்றும் ராமேசுவரம் வேர்க்கோடு பங்குத்தந்தை ஆகியோருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார்.
அதில், இந்த ஆண்டு கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா வருகிற மார்ச் 14 மற்றும் 15 ஆகிய 2 நாட்கள் நடைபெறுவதாகவும் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும், இந்தியாவில் இருந்தும் பக்தர்கள் இந்த திருவிழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வருகின்ற மார்ச் 14ம் தேதி மாலை ஆலயத்தின் முன்புள்ள கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்குகிறது. தொடர்ந்து ஆலயத்தை சுற்றி சிலுவை பாதை திருப்பலியும், அன்று இரவு திருவிழா திருப்பலியும் நடக்கிறது. இரவு 9 மணி அளவில் அந்தோணியார் தேர் பவனி நடைபெறுகிறது.
மறுநாளான மார்ச் 15ம் தேதி காலை 7 மணியளவில் திருவிழா திருப்பலி தொடங்குகிறது. சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக நடைபெறும் இந்த பிரார்த்தனையில் இந்தியா, இலங்கையைச் சேர்ந்தவர்களும், இருநாட்டு பங்குத்தந்தைகளும் கலந்து கொள்வார்கள்.
இது குறித்து நெடுந்தீவு பங்குத்தந்தை அசோக் வினோ கூறுகையில், “ச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா குறித்து யாழ்ப்பாணம் மறை மாவட்ட பிஷப் மூலம் அழைப்பிதழ் வந்துள்ளது. இந்த அழைப்பிதழை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து கொடுத்து கச்சத்தீவு ஆலய திருவிழாவிற்கு மக்கள் வருவதற்கு அனுமதி வழங்கி, அதற்கான ஏற்பாடுகள் செய்து தர வேண்டும் என கேட்க உள்ளோம்” என்றார்.
கடந்த ஆண்டு இலங்கை அரசு, இலங்கை கடற்படையை கண்டித்து மீனவர்கள் போராட்டம் நடத்தி வந்ததால் கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவை புறக்கணித்து, தமிழகத்தில் இருந்து மீனவர்கள் உள்பட யாரும் திருவிழாவில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!