மதுரை - தூத்துக்குடி புதிய ரயில் பாதை திட்டம் கைவிடப்பட்டது... மத்திய அமைச்சர் தகவல்!

 
ரயில்


மாநில அரசு ஒத்துழைப்பு தராததால் மதுரை-தூத்துக்குடி இடையிலான புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

சென்னை ஐ.சி.எப். தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு வரும் அமிர்த் பாரத் 2.0 படுக்கை வசதி கொண்ட ரயில் பெட்டிகளை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாடு முழுவதும் ரயில் போக்குவரத்தை மேம்படுத்த மத்திய அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 

தூத்துக்குடி

அந்த வகையில், தமிழ்நாட்டில் ரயில்வே துறை சார்பில் செயல்படுத்தப்படும் புதிய திட்டங்களுக்கு மாநில அரசு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தூத்துக்குடியில் இருந்து அருப்புக்கோட்டை வழியாக மதுரைக்கு புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டம் வேண்டாம் என தமிழக அரசிடம் இருந்து எழுத்துப்பூர்வமான கடிதம் வந்தது. இதனையடுத்து தூத்துக்குடி-மதுரை இடையே புதிய ரயில் பாதை அமைக்கும் பணியை மத்திய அரசு முழுவதுமாக கைவிட்டது.

ஏழை, எளிய மக்களும் வந்தே பாரத் ரயில்களில் பயணிக்கும் அனுபவத்தை பெற வேண்டும் என்ற நோக்கத்திற்காக குறைந்த கட்டணத்தில் அம்ரித் பாரத் ரயில்களை இயக்கப்படுகிறது. இந்த திட்டம் ரயில் பயணிகளிடேயே நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், தற்போது மேம்படுத்தப்பட்ட படுக்கை வசதி கொண்ட அம்ரித் பாரத் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த பெட்டிகளில் செல்போன் வைக்கும் பாக்ஸ், நவீன கழிவறை, அவசரகால அழைப்பு, உள்ளிட்ட 12 விதமான மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் இடம் பெற்றுள்ளது.

அஸ்வினி வைஷ்ணவ்

அடுத்த 2 ஆண்டுகளில் 50 அம்ரித் பாரத் ரயில்களை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம். தண்டவாளங்களில் இருந்து மர்ம நபர்கள் போல்டுகளை கழட்டி செல்வதாக புகார்கள் வந்தது. இதனையடுத்து இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் இருக்க பாதுகாப்பு அம்சங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளது.

ரயில் விபத்துக்களை தடுக்க என்ஜின்களில் `கவாச்' தொழில்நுட்பம் பொருத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் பாம்பன் பாலம் அமைக்கும் பணி முழுமையாக நிறைவு பெற்று சோதனை ஓட்டங்கள் நடைபெற்று வருகின்றன. விரைவில் அந்த பாலமும் திறந்து வைக்கப்படும்.

அதேபோன்று, ஜம்மு-காஷ்மீர் இடையே சிறப்பு வந்தே பாரத் ரயில் பாதை அமைக்கும் பணியும் நிறைவு பெற்றுள்ளது. சோதனை ஓட்டங்கள் வெற்றிகரமாக நிறைவடைந்த பின்னர், அங்கு ரயில்கள் இயக்கப்படும். கடந்த நிதியாண்டில் ரயில்வே மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் இதுவரை 76 சதவீதம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ரயில்வே வரலாற்றில் மிகப்பெரிய சாதனையாகும்" என்று கூறினார்.

 

 

இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web