நண்பனுடன் வீடியோ காலில் பேசியபடியே ரயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை!
கடன் பிரச்சினை காரணமாக மன உளைச்சலில் தவித்து வந்த வாலிபர் ஒருவர், தனது நண்பருடன் வீடியோ காலில் பேசிக்கொண்டே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சிச் சம்பவம் சென்னை எர்ணாவூரில் நடந்துள்ளது. கடன் சுமை காரணமாகவே இந்த முடிவை அவர் எடுத்துள்ளார் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சென்னை, எண்ணூர் அன்னை சிவகாமி நகரைச் சேர்ந்தவர் கோகுல் (31). இவர் அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஒப்பந்தத் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தார். சில மாதங்களுக்கு முன்பு இவரின் தந்தை மணி காலமானார். இதனால் கோகுல் தனது தாயுடன் வசித்து வந்தார். இந்தச் சூழலில், கோகுலின் தாயாருக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், அவர் மேலும் வேதனை அடைந்தார்.

ஏற்கனவே தந்தையின் மருத்துவச் செலவுக்காக வாங்கிய கடன், தற்போது தாயின் சிகிச்சைக்காக வாங்கிய கடன் எனப் பெரிய அளவில் கோகுல் கடன் சுமையில் தவித்துள்ளார். இந்த நிலையில், கோகுலுக்கு வட்டிக்குப் பணம் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுக்கத் தொடங்கியுள்ளனர். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான கோகுலுக்கு, நள்ளிரவு வரை தூக்கம் வராமல் அவர் தவித்துள்ளார்.
கடும் துயரத்தில் இருந்த கோகுல், நள்ளிரவில் தனது நண்பர் அஜித்துக்குச் செல்போன் மூலம் அழைத்துள்ளார். அப்போது தனக்கு ஏற்பட்டுள்ள கடன் பிரச்சினை, அதனால் ஏற்பட்டுள்ள மன உளைச்சல் மற்றும் தவிப்பு குறித்து நீண்ட நேரம் பேசி வேதனைப்பட்டுள்ளார்.

இந்நிலையில், படுக்கையில் இருந்த எழுந்து நண்பருடன் வீடியோ காலில் பேசிக் கொண்டே எர்ணாவூர் மசூதி ரயில்வே தண்டவாளம் அருகே சென்ற கோகுல், திடீரென எதிரில் வந்த மின்சார ரயில் முன் குறுக்கே பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.
கோகுல் ரயில் முன் பாய்ந்த இந்தக் கொடூரக் காட்சியை வீடியோ காலில் பார்த்துக் கொண்டிருந்த நண்பர் அஜித் அதிர்ச்சியில் உறைந்து கதறிக் கண்ணீர் விட்டுள்ளார். என்ன செய்வதென்று தெரியாமல் தவித்த அஜித், உடனடியாக ரயில்வே போலீஸாருக்குத் தகவல் கொடுத்துள்ளார்.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார், கோகுலின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காகச் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், கோகுல் கடன் பிரச்சினையால்தான் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் பிரச்சினை உள்ளதா என்ற கோணத்தில் தொடர்ந்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடன் தொல்லையால் நண்பருடன் பேசியபடியே ரயில் முன் பாய்ந்து வாலிபர் ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
