மகளைக் கிணற்றில் வீசிக் கொன்றுவிட்டு தாய் தற்கொலை... குடும்பத் தகராறால் விபரீதம்!

 
கவிதா கவிதா

மகளைக் கிணற்றில் வீசி கொலை செய்து விட்டு தாயும் தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் மதுரையை அதிர செய்துள்ளது. மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே உள்ள சிவரக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் கவிதா(27). இவருக்கும் விருதுநகர் மாவட்டம் எரிச்சநத்தம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி காளியப்பன் என்பவருக்கும் திருமணமாகி 9 வயதில் ஒரு மகனும், 3 வயதில் ஒரு மகளும் இருந்தனர். அண்மையில் தம்பதியிடையே ஏற்பட்ட கடுமையான குடும்பத் தகராறு காரணமாக, கவிதா தனது கணவருடன் கோபித்துக் கொண்டு குழந்தைகளுடன் சிவரக்கோட்டையில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு வந்து தங்கியுள்ளார்.

கிணறு

வீட்டை விட்டுப் பிரிந்து வந்த போதிலும், தனது கணவர் தன்னை ஒருமுறை கூட நேரில் வந்து பார்க்கவில்லையே என்ற கடுமையான மனவேதனையில் கவிதா இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழ்நிலையில் நேற்றைய தினம் கவிதாவின் தந்தை ஆறுமுகம் தனது 9 வயது பேரனைத் தன்னுடனே வெளியே அழைத்துச் சென்றுள்ளார். அந்த நேரத்தில் வீட்டில் தனது 3 வயது பெண் குழந்தையான சஞ்சீதாவுடன் கவிதா மட்டும் தனியாக இருந்துள்ளார்.

ஆம்புலன்ஸ்

தீராத மன உளைச்சலில் இருந்த கவிதா, திடீரெனத் தனது 3 வயது மகள் சஞ்சீதாவை வீட்டின் அருகே இருந்த 50 அடி ஆழமுள்ள கிணற்றில் தூக்கி வீசிக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். அதன் பின்னர் எவ்வித சலனமுமின்றி வீட்டிற்குள் வேகமாகத் திரும்பிய அவர், தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்துத் தகவலறிந்து வந்த கள்ளிக்குடி போலீசார், கவிதாவின் உடலையும், கிணற்றில் இருந்து பச்சிளம் குழந்தையின் உடலையும் மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தாத்தாவுடன் வெளியே சென்றதால் மூத்த மகன் நல்வாய்ப்பாக உயிர் தப்பினான்.