இன்று அகவை 100 காணும் கம்யூனிச இயக்கத்தின் முதுபெரும் தலைவர் என்.சங்கரய்யா!

 
இன்று அகவை 100 காணும் கம்யூனிச இயக்கத்தின் முதுபெரும் தலைவர் என்.சங்கரய்யா!

1947க்கு முன்பு பிரிட்டிஷ்காரர்களின் பிடியில் அகப்பட்டிருந்தது இந்திய பெருநாடு. இதிலிருந்து விடுதலை பெற எண்ணற்ற மாணவர்கள், இளைஞர்கள் போராட்டக் களத்தில் குதித்த நேரம் அது. தியாக தீபங்களாக விடுதலை வேட்கை கொண்ட மாணவர்கள் வெள்ளையர் ஆட்சிக்கு எதிராக கல்லூரிகளில் சங்கம் அமைத்தனர்.

அந்த வகையில் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் மாணவர் சங்க செயலாளராக ஒரு துடிப்புமிக்க மாணவர் தேர்வு செய்யப்பட்டார். இதனால் கொதிப்படைந்த கல்லூரியின் வெள்ளைக்கார முதல்வர், சங்க செயலாளரான அந்த மாணவரிடம் மாற்றுச் சான்றிதழ் (TC) வாங்கிக் கொண்டு கல்லூரியில் இருந்து வெளியேறு என்று கோபமாக சொன்னார்.
உடனே அந்த மாணவர், எனக்கு டி.சி கொடுத்து கல்லூரியில் இருந்து வெளியேற்றினால் கல்லூரியில் மாணவர் போராட்டம் வெடிக்கும் என்று எச்சரிக்கை விடுத்தார்.

இன்று அகவை 100 காணும் கம்யூனிச இயக்கத்தின் முதுபெரும் தலைவர் என்.சங்கரய்யா!

அதிர்ச்சியடைந்த கல்லூரி முதல்வர், வேறு வழியில்லாமல் அந்த மாணவரை வெளியேற்றாமல் மிரட்டலோடு நிறுத்திக் கொண்டார். தன்னை மிரட்டிய கல்லூரி முதல்வரையே எச்சரித்த அந்த மாணவர்தான், பிற்காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணி தலைவராக உயர்ந்த என்.சங்கரய்யா.

இவர் தமது மாணவப் பருவத்திலேயே பொதுவாழ்வுக்கு வந்துவிட்டவர். இவர் 1922 ஜூலை 15-ல் கோவில்பட்டியில் பிறந்தவர். இயற்பெயர் பிரதாப சந்திரன். அவரது பாட்டனார் எல்.சங்கரய்யா தன் பெயரைத்தான் வைக்க வேண்டும் என உண்ணாவிரதம் இருக்க, பள்ளியில் படித்துக் கொண்டிருந்த பிரதாப சந்திரனின் பெயர் சங்கரய்யாவாக மாற்றப்பட்டது தனி கதை.

இன்று அகவை 100 காணும் கம்யூனிச இயக்கத்தின் முதுபெரும் தலைவர் என்.சங்கரய்யா!

அப்போதைய சென்னை மாகாணத்தின் முதல்வர் ராஜாஜி. அவர் தான் முதலில் இந்தியைக் கட்டாயப் பாடமாக்கும் சட்ட மசோதாவைச் சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். இதற்குப் பெரியார், சிங்காரவேலர், ஜீவா போன்ற தலைவர்களும், தமிழறிஞர் பலரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். மதுரைக்கு வந்த ராஜாஜிக்கு எதிர்ப்புத் தெரிவித்துக் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் சங்கரய்யா பங்கேற்றார்.

மதுரையில் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் கிளை 9 -பேர் கொண்டு சங்கரய்யா தலைமையில் ரகசியமாக அமைக்கப்பட்டது. இதன் செயல்பாடுகள் வேகமெடுத்தன.ஆங்கிலேயர் ஆட்சியின் ஆதிக்கத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்திக் கைது, மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் கைது என அடுத்தடுத்து குற்றம் சாட்டப்பட்டதில் அவரது கல்லூரிப் படிப்புக்கும், அவரை வழக்கறிஞராக்க வேண்டும் என்ற அவரது தந்தையின் கனவுக்கும் முற்றுப்புள்ளி விழுந்தது.

இன்று அகவை 100 காணும் கம்யூனிச இயக்கத்தின் முதுபெரும் தலைவர் என்.சங்கரய்யா!

“நாங்கள் வேலைக்காகப் போராடுபவர்கள் அல்ல… நாட்டு விடுதலைக்காகப் போராடுபவர்கள்” என விடுதலை வேட்கையை மாணவர்கள் மத்தியில் தூண்டியவர். பட்டப்படிப்பின் இறுதியாண்டுத் தேர்வை எழுதுவதற்கு 15 நாள்களுக்கு முன் 18 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டதில் இவரால் கல்லூரி இறுதித் தேர்வுகளை எழுத முடியவில்லை.

அப்போது நாடு முழுவதும் சுதந்திரப் போராட்டம் தீயாகப் பற்றிப் பரவியது. கம்யூனிஸ்ட் கட்சி மீதான தடை 1942 ஜூலையில் நீக்கப்பட்டது. அந்த சமயம் கம்யூனிஸ்ட் தமிழ்நாட்டுப் பிரிவின் பொதுச் செயலாளராகச் சங்கரய்யா தேர்ந்தெடுக்கப்பட்டார். “வெள்ளையனே வெளியேறு!” இயக்கத்தில் கைது செய்யப்பட்ட காந்தி உட்பட பல தலைவர்களின் விடுதலை செய்யக் கோரி, மாணவர்களைத் திரட்டி இயக்கம் நடத்தியவர். பாளையங்கோட்டையில் நடந்த போலீஸ் தடியடியில் படுகாயம் அடைந்து கைது செய்யப்பட்டுச் சிறையிடப்பட்டார்.

இன்று அகவை 100 காணும் கம்யூனிச இயக்கத்தின் முதுபெரும் தலைவர் என்.சங்கரய்யா!

கம்யூனிஸ்டுகள் மீது காங்கிரஸ்கார்கள் கட்டவிழ்த்துவிட்ட தாக்குதல்களை முறியடித்து கலை, இலக்கியம், ஆடல், பாடல் என்பதைப் பயன்படுத்தி, உழைக்கும் மக்களைக் கிளர்ந்தெழச் செய்தவர். அப்போதுதான் வரலாற்றுச் சிறப்புமிக்க கடற்படையினர் போராட்டமும் நடத்தப்பட்டது. இந்த ஆதரவுப் போராட்டத்தை துப்பாக்கியைக் காட்டி போலீஸார் மிரட்டியபோதும் மதுரையில் நடத்தினார் சங்கரய்யா. இந்திய சுதந்திரத்துக்கு முதல் நாள், இரவில்தான் விடுதலையானார்கள். சுதந்திரப் போராட்ட வீரர் சங்கரய்யாவுக்குச் சுதந்திர இந்தியாவிலும் ஓய்வில்லை. 1967, 1977, 1980 சட்டமன்ற தேர்தல்களில் வெற்றிபெற்று மொத்தம் 11 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியவர். எட்டு ஆண்டுகள் சிறைவாசம், மூன்று ஆண்டுகள் தலைமறைவு, மக்கள் போராட்டங்கள் என்று வாழ்ந்த போராளி சங்கரய்யா.

கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தபோது ‘ஜனசக்தி’ பொறுப்பாசிரியராகவும், ‘தீக்கதிர்’ பத்திரிகையில் கட்டுரைகளும் எழுதினார். கம்யூனிஸ்ட் தோழர் பொன்னுச்சாமியின் மகள் நவமணியைத் திருமணம் செய்துகொண்டார்.75 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில், தன் பிள்ளை, பேரக் குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கானோருக்கு சீர்திருத்த, சாதி மறுப்புப் திருமணங்களை நடத்திவைத்திருக்கிறார். அப்பழுக்கற்ற பொதுவாழ்வும், மக்கள் சேவையும், மகத்தான தியாகமும் கொண்ட கம்யூனிச இயக்கத்தின் முதுபெரும் தலைவர் என்.சங்கரய்யாவுக்கு இன்று அகவை 100. லட்சியத்தில் உறுதியோடு கொள்கைக் குன்றாய் விளங்கும் சங்கரய்யாவின் வாழ்க்கை இன்றைய இளைஞர்களுக்கு கலங்கரை விளக்கம். தோழர் சங்கரய்யா வாழிய பல்லாண்டு!

From around the web